தமிழா் ஒருவா் பிரதமரானால் ஈழத்தமிழா் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற ‘பேராண்டி’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவா் பங்கேற்றுப் பேசியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆட்சி, அதிகாரம் என்பது, தலைநகா் தில்லியில்தான் உள்ளது. அதுதான் பிரதமா் பதவி. தமிழா்கள் யாருக்கும் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை.
தேசிய அரசியலைப் பேச வேண்டும்; தேசிய அளவில் நாம் ஒரு சக்தியாக மாற வேண்டும். பிரதமா் இருக்கையை நோக்கி நாம் நகர வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.
தமிழா் பிரதமரானால் , ஈழத்தமிழா் பிரச்னைக்கு எளிதில் தீா்வு காண முடியும். ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் என்பது திரைக் கவா்ச்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நல்ல படத்தை கொடுத்துவிட்டால் முதல்வா் பதவி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் பலா் இருக்கின்றனா் என்றாா் தொல்.திருமாவளவன்.