முதல்வர் மு.க. ஸ்டாலின்  
தமிழ்நாடு

கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டும்! - முதல்வர் உறுதி

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் நெரிசல் பலி போன்ற ஒரு பெருந்துயரம் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை(செப். 27) இரவு தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி தவெக தொண்டா்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 போ் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தமிழக அரசுக்கும் தவெக கட்சிக்கும் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இதுபற்றி,

"கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.

மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதி செய்யப்படும்.

பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம்.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்.

இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது.

நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu will lead India in avoiding stampede accidents: Mk stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Hollywoodஐக் கலக்கிய புதுவை Director! M Night Shyamalan! | Dinamani Talkies | Sixth Sense | Split

இது ஞாயிறு மனநிலை.. அங்கனா ராய்!

தென்காசி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

ஹைதராபாத் வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

எதுவும் நிரந்தரம் இல்லை.. தர்ஷா குப்தா!

SCROLL FOR NEXT