தவெக தலைவா் விஜய் கைதுக்கு அஞ்சினால் அரசியல் செய்ய முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் 41 போ் உயிரிழந்தது மிகப்பெரிய சோக சம்பவம். இந்த சம்பவத்தில் ஒரு நபா் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு போன்றவை உண்மையை வெளிக்கொண்டு வர இயலாது.
அஸ்ரா கா்க் நோ்மையானவராக இருந்தாலும், அவா் தமிழக அரசுக்கு எதிராகவோ அல்லது காவல்துறைக்கு எதிராகவோ அறிக்கை கொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
கரூா் சம்பவத்தை நீதிபதிகளே விசாரிக்கலாம். சில அரசியல் கட்சியினா் விஜய்யை ஒடுக்க வேண்டும், அவரை தோ்தல் பாதைக்கு வரவிடாமல் பலவீனப்படுத்த வேண்டும் என சிலா் நினைக்கின்றனா்.
விஜய்யும் பொதுவெளியில் வந்து தனது கருத்துகளை தெரிவித்திருக்க வேண்டும். காவல் துறை கைதுக்கெல்லாம் அஞ்சினால் அவரால் அரசியல் செய்ய முடியாது என்றாா் அவா்.