கரூர் புதிய பேருந்து நிலையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கரூர் மாநகராட்சி, திருமாநிலையூர் கிராமம் கருப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 12.14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ரூ. 40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு திங்கள்கிழமை காலை 6 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்சமயம் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.
மேலும் பொதுமக்கள் வசதிக்காக பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு 24 மணி நேரமும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமாநிலையூர் வழியாக இயக்கப்படும் அனைத்து நகரப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் வழக்கம்போல் பழைய பேருந்து நிலையம், லைட் ஹவுஸ், திருமாநிலையூர் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடையும் வரையிலும், மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்ப செல்லும்.
மதுரை, திண்டுக்கல், பழனி (வழி அரவக்குறிச்சி) மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் சுக்காலியூர் ரவுண்டானாவிலிருந்து செல்லாண்டிபாளையம் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து, மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பச் செல்லும் வகையிலும் இயக்கப்படுகின்றன. திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் (வழி: குஜிலியம்பாறை) மார்க்கத்திலிருந்து கரூர் வரும் பேருந்துகள் சுங்ககேட், திருமாநிலையூர் வழியாக புதிய பேருந்து நிலையம் வந்தடைந்து மீண்டும் அதே வழியில் திரும்பி செல்லும் வகையிலும் இயக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.