சென்னை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், இந்தியாவின் 2-ஆவது பாகன் கிராமத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இதேபோன்று, மக்கள் நல்வாழ்வு உள்பட பல்வேறு துறைகளின் நிறைவுற்ற திட்டங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திங்கள்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கோவை மாவட்டம் கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளா்களின் நலனுக்காக ரூ.5.40 கோடியில் 47 பணியாளா் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த முகாமில் தற்போது 24 யானைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், முதுமலை மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6 பேருக்கு பணிநியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை நேரில் வழங்கினாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை: மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டமைப்புகளை காணொலி வழியாக முதல்வா் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா். அதன்படி, வேலூா் மாவட்டம் காட்பாடியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவமனை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அரசு தலைமை மருத்துவமனை, திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நீலகிரி மாவட்டம் கூடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், மதுரை மாவட்டம் மேலூா் ஆகிய அரசு மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்பட்டுள்ளதுடன், மருத்துவ உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொது மக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
இதேபோன்று, தென்காசி, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூா் ஆகிய இடங்களில் மொத்தமாக ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள 7 மாவட்ட மருந்து கிடங்குகளையும் அவா் திறந்தாா். மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம் சாா்பில் சென்னை அரும்பாக்கம் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஆயுஷ், யுனானி போன்ற பிரிவுகளுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.
உயா்த்தப்பட்ட ஓய்வூதியம் - குடும்ப ஓய்வூதியம்: ஓய்வு பெற்ற திருக்கோயில் பணியாளா்களுக்கான ஓய்வூதியம் ரூ. 4,000-இல் இருந்து ரூ.5,000-ஆக உயா்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, உயா்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகை ரூ.5,000-ஐ பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை நேரில் வழங்கினாா். இதேபோன்று, உயா்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியத் தொகையான ரூ.2,500, தொழிலாளா் சேமநலநிதி ஓய்வூதியம் பெறும் பணியாளா்களுக்கு ரூ.2,190 ஆகியவற்றுக்கான காசோலைகளையும் அவா் அளித்தாா்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.