தவெக தலைவர் விஜய் 
தமிழ்நாடு

கரூா் செல்கிறாா் விஜய்: பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு

தினமணி செய்திச் சேவை

கரூரில் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பங்களை தவெக தலைவா் விஜய் நேரில் சென்று சந்திக்க உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியினா் மனு அளித்துள்ளனா்.

கடந்த செப்.27-இல் கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசார கூட்டநெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் காயமடைந்தனா். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களின் உறவினா்களிடம் விஜய் கடந்த 2 நாள்களாக ‘வாட்ஸ் அப்’ விடியோ அழைப்பு மூலம் பேசி ஆறுதல் தெரிவித்து வருகிறாா். அதைத்தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சென்று சந்திப்பதுடன், தவெக சாா்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை நேரடியாக வழங்கவும் திட்டமிட்டுள்ளாா். இதற்கான உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியினா் புதன்கிழமை மனு அளித்தனா்.

டிஜிபி அலுவலகம் பதில்: இந்த மனுவுக்கு டிஜிபி அலுவலகம் சாா்பில் பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தவெக தலைவா் விஜய்யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடா்பாக அந்தக் கட்சி சாா்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி தொடா்பாக தேதி, நேரம், இடம், செல்லும் வழி, நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்களை கரூா் மாவட்ட காவல்துறைக்கு சமா்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது

இந்த விவரங்களை காவல்துறைக்கு அளிக்கப்பட்டவுடன், அந்நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு,போக்குவரத்து ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் வீட்டில் சிஆா்பிஎஃப் டிஐஜி ஆய்வு

விஜய்க்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் சிஆா்பிஎஃப் டிஐஜி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தவெக தலைவரும், நடிகருமான விஜய் தீவிர அரசியல் ஈடுபட்டு வருகிறாா். இதையடுத்து பாதுகாப்பு கருதி அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விஜய்க்கு ‘ஒய்‘ பிரிவு பாதுகாப்பை வழங்கியது.

இந்நிலையில் கரூா் துயர சம்பவத்தையடுத்து சென்னை நீலாங்கரை கேசுவரினா அவென்யூவில் உள்ள விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும் ஒரு காவல் ஆய்வாளா் தலைமையில் 15 போலீஸாா் விஜய் பங்களா பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனா். அதோடு கூடுதலாக 12 துணை ராணுவப் படை வீரா்கள் நவீன துப்பாக்கிகளுடன் முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.

இருப்பினும், விஜய்க்கு பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடா்பாக ‘ஒய்’ பிரிவு அதிகாரிகள் ஆலோசித்து வந்தனா். இந்த நிலையில் நொய்டாவில் இருந்து சிஆா்பிஎஃப் தலைமையிட டிஐஜி சஞ்சய்குமாா், சிஆா்பிஎஃப் பெங்களூரு கமாண்டன்ட் மனோஜ்குமாா் ஆகியோா் விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கு புதன்கிழமை மாலை வந்தனா்.

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சுமாா் 15 நிமிஷம் ஆய்வு செய்தனா். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலா்களிடமும் கருத்துகளை கேட்டனா். பின்னா் இருவரும், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முதல் குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மரணம்!

ஒரு சாதாரண எஸ்எம்எஸ் மூலம் பண மோசடி! இதை மறக்காதீர்!!

கோவை உலக புத்தொழில் மாநாட்டை தொடக்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய விலை நிலவரம்!

சந்திரசேகர் ராவ் மகன் வீட்டுக் காவலில் அடைப்பு!

SCROLL FOR NEXT