கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று(சனிக்கிழமை) விசாரணை நடத்தி வருகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி இரவு விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் திடீரென நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த குழுவினர் கடந்த 5-ம் தேதி முதல் கரூரில் சம்பவம் நடைபெற்ற பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து சம்பவம் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகளிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சேலம் மாவட்ட தவெக மத்திய மாவட்டச் செயலாளர் பார்த்திபனை விசாரிக்கும் வகையில் ஆய்வு குழுவினர் கடந்த இரு தினங்களுக்கு முன் சம்மன் அவருக்கு அனுப்பினர்.
அதன்படி சனிக்கிழமை காலை 11 மணியளவில் பார்த்திபன் தனது வழக்குரைஞர்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரானார்.
இதை யடுத்து பார்த்திபனிடம் விழா ஏற்பாடுகளை எவ்வாறு செய்தீர்கள்? முறையான அனுமதியை காவல்துறையிடம் பெற்றீர்களா? கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் நாமக்கல்லில் இருந்தும் ஏன் அதிகளவில் பங்கேற்றீர்கள்? என்பன குறித்து குறுக்கு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூரில் நடந்த தவெக கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவர் பார்த்திபனும் ஒருவர் என்று கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சிக்காக சவுண்ட் சர்வீஸ் அமைத்துக் கொடுத்த ஆடியோ என்ஜினியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.