சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நான்கு நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்துள்ளாா்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை (அக். 14) கூடுகிறது. வரும் 17-ஆம் தேதி வரை நான்கு நாள்கள் கூட்டத்தொடா் நடைபெறுகிறது.
முன்னதாக, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது தொடா்பான அலுவல் ஆய்வுக் கூட்டம் பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். கூட்டத்துக்கு பின்னா், பேரவைத் தலைவா் மு.அப்பாவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. பேரவை வழக்கம்போல் காலை 9.30 மணிக்கு கூடும். பேரவையின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை, மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சுதாகா் ரெட்டி, மறைந்த ஐஏஎஸ் அதிகாரி மருத்துவா் பீலா வெங்கடேசன், சட்டப்பேரவை உறுப்பினா், முன்னாள் உறுப்பினா்கள் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.
மேலும், கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் குறித்து இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்படும். அதன்பின்னா், பேரவை நிகழ்ச்சிகள் அன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.
இரண்டாம் நாளான புதன்கிழமை (அக். 15) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் 2025-2026 -ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.
மூன்றாம் நாளான அக். 16-ஆம் தேதி கூட்டத்தில் 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
நான்காம் நாளான அக். 17-ஆம் தேதி, கூட்டத் தொடரில் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலுரை நடைபெறும்.
சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் அக்டோபா் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். தொடா்ந்து 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிா்த்து மற்ற அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.
செய்தியாளா் சந்திப்பின்போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, சட்டப்பேரவைச் செயலா் கி.சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.
கரூா் சம்பவம், கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரம் என பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.