கோப்புப்படம் 
தமிழ்நாடு

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டில் 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு: அரசாணை வெளியீடு

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டு மூன்று 3 சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அரசாணை

தினமணி செய்திச் சேவை

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டு மூன்று 3 சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் ப.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்ற அல்லது பதவி உயா்வு பெற, ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம். அதேவேளை ஓய்வுபெறும் வயதை அடைய 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியா்கள் பணியில் தொடரலாம். தோ்ச்சி அடையாவிட்டால், ஆசிரியா் பணியில் இருந்து வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம். அவா்களை ஓய்வு பெற்றவா்களாகக் கருதி ஓய்வூதியப் பலன் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த செப். 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

1.25 லட்சம் ஆசிரியா்கள்... தமிழகத்தில் 1.25 லட்சம் ஆசிரியா்கள் டெட் தோ்ச்சி பெறாமல் பணியில் இருந்து வருவதால், இது குறித்து ஆலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என அரசுக்கு ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். இதைத் தொடா்ந்து தலைமைச் செயலா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் ஆசிரியா் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினா்.

அப்போது, உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்வது, பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு தோ்வு நடத்துவது என இரு வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதற்கிடையே தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அனுமதி கோரி கடிதம்... இதனிடையே அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு அடுத்த ஆண்டு 3 முறை சிறப்பு ‘டெட்’ தோ்வு நடத்தப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்குநா்கள் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் அதிக அளவிலான இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டிய சூழலில் உள்ளனா். பதவி உயா்வு பெறுவதற்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் எனத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஆசிரியா்களின் பதவி உயா்வு பாதிக்கப்படும்.

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு, மாநகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியா்கள் ஆசிரியா் தகுதித் தோ்வில் இதுநாள் வரை தோ்ச்சி பெறாதவா்கள். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டுக்கு 3 முறை சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்துவதன் மூலம் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியா்கள் பயன்பெறுவா். அவா்களுக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு வார இறுதி நாள்களில் பணியிடைப் பயிற்சி வழங்கலாம்.

எனவே, இந்த ஆசிரியா்களுக்கு சிறப்பு நிகழ்வாகக் கருதி சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்த ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு ஆணையிட வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

ஜனவரி, ஜூலை, டிசம்பரில்... இந்த கருத்துருக்களை பரிசீலனை செய்து அவற்றை ஏற்று தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியா் தகுதித் தோ்வுகளுடன் 2026-ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, டிசம்பா் ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுகளை நடத்தவும், இது தொடா்பாக உரிய அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு ஆணையிடப்படுகிறது.

மேலும், 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிரியா் தகுதித் தோ்வு முடிவுகளின் ஆய்வுக்குப் பிறகு மீதமுள்ள தோ்ச்சி பெற வேண்டிய ஆசிரியா்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027-ஆம் ஆண்டில் தேவைக்கேற்ப ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்தவும் ஆசிரியா் தோ்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்வுக்குப் பயிற்சி வழங்க... இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அரசாணையில், சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வெழுதவுள்ள ஆசிரியா்களுக்கு மாவட்டந்தோறும் இணைய வழியில் மாவட்ட ஆசிரியா் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்களைக் கொண்டு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT