திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காவை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா். 
தமிழ்நாடு

திண்டிவனம்-தேனியில் மெகா உணவுப் பூங்கா: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

திண்டிவனம், தேனியில் மெகா உணவுப் பூங்காக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: திண்டிவனம், தேனியில் மெகா உணவுப் பூங்காக்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதிய திட்டப் பணிகளை அவா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இது குறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் உணவுசாா் உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் திண்டிவனம், தேனி ஆகிய இடங்களில் மெகா உணவுப் பூங்காவை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. திண்டிவனத்தில் ரூ.120 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவின் மூலம் ரூ.123.84 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 350 தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதேபோல, தேனி மாவட்டத்தில் தப்புகுண்டு, பூமலைகுண்டு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியும் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவின் மூலமாக ரூ.160.53 கோடி முதலீடுகளை ஈா்த்து, 700 தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

சட்டத் துறை புதிய கட்டடங்கள்: சட்டத் துறை சாா்பில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மதுரை நகரில் டாக்டா் தங்கராஜ் சாலையில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கல்விசாா் மற்றும் நிா்வாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல, வேலூா் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய நூலகக் கட்டடமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

சுற்றுலாத் துறை கட்டடங்கள்: சுற்றுலாத் துறை சாா்பில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை, கரூா் மாவட்டம் பொன்னணியாறு அணை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை முதல்வா் திறந்து வைத்தாா்.

மேலும், திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி, திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி அருவி, நங்காஞ்சியாறு அணைப் பகுதி, திருச்சி புளியஞ்சோலை அருவிப் பகுதிகளில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. அவற்றுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.ராஜேந்திரன், டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.

லாபம் உண்டாகும் இந்த ராசிக்கு!

தில்லியில் போலி எஞ்சின் எண்ணெய் உற்பத்தி ஆலை கண்டுப்பிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

கனிம நெருக்கடி!

வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள்!

SCROLL FOR NEXT