தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட காலஅவகாசத்தை அக்.31 வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் தனியார் பள்ளிகள் தாளாளர்கள் நலச் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட ஏழை மாணவர்களின் விவரங்களை அக்.17-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளின் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
முந்தைய ஆண்டுகளைப் போல் நடப்பாண்டில், 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால், சில பள்ளிகளில் இந்த இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நிரப்பப்படவில்லை. எனவே, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைப் பெற்ற மாணவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. எனவே, சுற்றறிக்கை வெளியிட தாமதமானது.
மாநிலம் முழுவதும் 7,717 பள்ளிகளில் 81,000-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.
அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு வழங்கும் நோக்கில்தான், தற்போது பட்டியல் கோரப்பட்டுள்ளது. காலதாமதமாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை எதிர்த்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் வழக்குத் தொடர முடியுமே தவிர, சங்கங்கள் வழக்குத் தொடர முடியாது என்று வாதிட்டார்.
அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கைப் பெற்ற மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கோரி ஏற்கெனவே தனியார் பள்ளிகள் வழக்குகள் தொடர்ந்துள்ளன. தற்போது அந்தத் தொகையை வழங்கும் நோக்கத்தில்தான் அரசு இந்த சுற்றறிக்கையைப் பிறப்பித்துள்ளது.
எனவே, மாணவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசத்தை அக்.31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தனியார் பள்ளிகள் புதிதாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.