தமிழகத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்றன.
போட்டி நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பையை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தமிழக விளையாட்டுத் துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது.
தேசிய போட்டிகளாக இருந்தாலும், சர்வதேச போட்டிகளாக இருந்தாலும்,சிறப்பாக நடைபெறும் இடமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழக வீரர்கள் வெற்றிகளைக் குவிக்க காரணமான நம் பயிற்சியாளர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.
விளையாட்டை வளர்க்க, திறமையான வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க, ரூ.37 கோடி பரிசுத் தொகையுடன் முதல்வர் கோப்பை போட்டிகளை நடத்தியிருக்கிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில்,
நம் தமிழ்நாடு, அனைத்துத் துறைகளிலும் உயரங்களை அடைந்துள்ளது. இந்த சாதனைப் பயணம் விளையாட்டுத் துறையிலும் எதிரொலிக்கிறது.
நிகழாண்டு மொத்தம், 16.29 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்க பதிவு செய்தனர். தமிழக அளவில் 32 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்தில், விளையாட்டுத் துறை உள்கட்டமைப்புக்காக, ரூ.170.33 கோடி ஒதுக்கப்பட்டது.
ஆனால், நாம் நான்கு ஆண்டுகளில், ரூ.601.38 கோடி ஒதுக்கியிருக்கிறோம். ஒட்டுமொத்தமாக, விளையாட்டுத் துறைக்காக ரூ.1,945 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கி, இதுவரை 1,369 வீரர் - வீராங்கனைகளுக்கு, 25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 5,393 விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.172 கோடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் போன்று, வேறு எந்த மாநிலமும் விளையாட்டுகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் உதவிகள் செய்திருக்க மாட்டார்கள் என்று பெருமையுடன் சொல்வேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
மருத்துவக் காப்பீட்டு திட்டம்: விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை முதலிடம்: 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலத்துடன் சென்னை முதலிடமும், 36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலத்துடன் செங்கல்பட்டு இரண்டாமிடமும், 33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலத்துடன் கோவை மூன்றாம் இடமும் பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.