மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த அரசு மருத்துவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கலந்தாய்வு நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு அரசு மருத்துவ அலுவலர் சங்கத்தின் (டிஎன்எம்ஓஏ) சார்பில் மருத்துவக் கல்வி இயக்ககத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் அகிலன் கூறியதாவது:
மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், முதுநிலை உறைவிட மருத்துவர், இளநிலை உறைவிட மருத்துவர், பயிற்றுநர் பணியிடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், அதில் பல ஆண்டுகளாக அரசு சேவையில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மாறாக, சமீபத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட இளநிலை மருத்துவ அலுவலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு கலந்தாய்வு நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதன் அடிப்படையிலேயே முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தோம் என்றார் அவர்.
அரசு மருத்துவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, சிறப்பு கலந்தாய்வை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.