பேரிடர் காலங்களை எதிர்கொள்ள அனைத்து வகை ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதுகுறித்த துணைக் கேள்வியை பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி எழுப்பினார். அப்போது பேசிய அவர், பேரிடர் மீட்புப் பணிகளுக்குத் தேவைப்படும் கனரக வாகனங்களை உள்ளூரிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ இறக்குமதி செய்வதற்கு அரசு முன்வருமா? என்றார்.
இதற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த பதில்:
நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்களின்போது, பயன்படுத்த தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினரிடம் 9 கனரக வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. பேரிடர் மீட்புப் பணிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.193.93 கோடியில் மீட்பு உபகரணம் மற்றும் கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பேரிடரை எதிர்கொள்ள அனைத்து வகை ஆயத்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
பஞ்சாப் மாநிலத்துக்கு அதிகாரிகளை அனுப்பி தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வகையிலான பேரிடர் மீட்பு வாகனங்களை வாங்க ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பேரிடருக்கென மாநில அரசுக்கு தனியாக நிதி உள்ளது. மத்திய அரசு நிதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் தேவையான நிதியைப் பெற்று பேரிடர் உபகரணங்களை கொள்முதல் செய்வோம் எனப் பதில் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.