கோயில்களின் சொத்துகளை மேம்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது ஏன் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத் திருத்த மசோதாவை
சட்டப்பேரவையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
சமய நோக்கங்களுக்காக வழங்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட அசையா சொத்துகள் பல பயன்பாடின்றி உள்ளன. அந்த மதிப்புமிக்க சொத்துகளைப் பயன்படுத்துவதும், வருவாய் ஈட்டுவதும் அவசியமாகும். ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலா்கள், தங்கள் பொறுப்பிலுள்ள நிதியைப் பயன்படுத்தி சொத்துகளை மேம்படுத்த, அதிகாரம் அளிக்கும் வகைமுறைகள் இல்லை. அதற்கேற்ற வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
சமய நிறுவனங்களால் கல்வி நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல், அா்ச்சகா்கள், இசைக் கலைஞா்கள், ஓதுவாா்கள் ஆகியோருக்கான பயிற்சிப்
பள்ளிகளை நிறுவவும் சட்டத்தில் திருத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீது, அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக), ம.சிந்தனைச் செல்வன் (விசிக) உள்ளிட்டோா் பேசினா். அவா்களின் கருத்துகளைத் தொடா்ந்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த விளக்கம்:
அறங்காவலருடைய பொறுப்பு என்னவென்றால், கொண்டு வரப்படுகின்ற திட்டங்களுக்கு அரசுக்கு முன்மொழிவை அனுப்புவதுதான். இதைத் தவிர இத்தனை கோடியில்தான் அவா்களுக்கு வரைமுறை என்பது சட்டத்தில் எங்கும் இடமில்லை. அதேபோல், கல்லூரிகளுக்கு கோயில் நிதியைப் பயன்படுத்தலாமா என்ற கேள்வியை வைத்தாா். அதிமுக ஆட்சியில் பழனி திருக்கோயில் கல்லூரிக்கு நிதியொதுக்கப்பட்டு, வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது கொண்டு வரப்பட்டிருக்கின்ற சட்டப் பிரிவினுடைய திருத்தம், என்னவென்றால், இந்த பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கு திருக்கோயிலினுடைய உபரி நிதியை பயன்படுத்துவதற்காகத்தான் பாதுகாப்பு கருதி சட்டப்பிரிவு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
நாங்கள் கொண்டு வந்திருக்கின்ற சட்டத் திருத்தத்தால் திருக்கோயில் நிலங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும், திருக்கோயில்களின் உபரி நிதிகளை, திருக்கோயில்களின்வசம் இருக்கின்ற நிலங்களில், அந்தத் திருக்கோயில்களின் பயன்பாட்டிற்காக வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளைக் காண்பதற்காகத்தான் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.
பல திருக்கோயில்களுக்கு திருவிழாக்களுக்கு, அன்றாடம் நடைபெற வேண்டிய பூஜைகளுக்கு என நிலங்களை முன்னோா்கள் எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறாா்கள். அந்த நிலங்கள் விவசாயத்திற்குக்கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிற தரிசு நிலங்களாகும். அந்த நிலங்களில் திருக்கோயில்களுடைய வருமானத்திற்காக கூடுதலாக கட்டடங்கள் கட்டுவதற்குக் காரணம் என்னவென்றால், அந்தத் திருக்கோயில்களுடைய நிலங்கள் யாருடைய ஆக்கிரமிப்பிற்கும் செல்லாமல் இருக்கும் என்பதற்காகத்தான்.
கோயில்களுடைய நிலங்களில் மக்களுடைய பயன்பாட்டிற்காக கட்டடங்கள் கட்டப்படுகின்றபோது, அந்தத் திருக்கோயில்களுக்கு வருமானம் வரும். அதனால், அத்திருக்கோயில்களில் தினந்தோறும் கால பூஜைகள் நடைபெறும் என்ற உயரிய நோக்கத்தில்தான் இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று பேசினாா்.
இதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலமாக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.