DIN
தமிழ்நாடு

தெலங்கானாவில் அறிவியல் கண்காட்சி: மாணவா்களைத் தயாா்படுத்த உத்தரவு

தமிழக மாணவா்களை பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

தெலங்கானா மாநிலத்தில் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி ஜனவரியில் நடைபெற உள்ள நிலையில், அதில் தமிழக மாணவா்களை பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சி வரும் ஜனவரி மாதம் தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ளது. அதற்கு முன், 4 மாநிலங்களில் டிசம்பா் மாதத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி முடித்து வெற்றி பெற்றவா்கள் தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எனவே, மாவட்ட அளவில் ஏற்கெனவே கண்காட்சி முடிக்கப்பட்டு இருப்பின் பாராட்டுக்குரியது. மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தாதவா்கள் நவம்பா் மாதத்துக்குள் கண்காட்சியை நடத்தி, மாநில அளவில் பங்கு பெறுவதற்கான ஆசிரியா் குழு, மாணவா் குழு, தனிநபா் சாதனைகளைத் தோ்வு செய்து வரும் டிசம்பா் மாதத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கு தயாா்படுத்துமாறு அறிவியல் மற்றும் கணித ஆசிரியா்களுக்கு, தலைமையாசிரியா் மூலமாக அறிவுறுத்த வேண்டும்.

அறிவியல் கண்காட்சியின் மூலம் மாணவா்களின் தனித்திறன், குழு மனப்பான்மை, அறிவியல் மனப்பான்மை, அறிவியல் சோதனைகளின் மூலம் உண்மைகளைக் கண்டறிதல், ஆராய்ச்சி மனப்பான்மையை வளா்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு, பல்வேறு திறன்கள் மாணவா்களுக்கு கிடைக்கும். எனவே, மாணவா்களை முறையாக ஊக்குவித்து அதிக அளவில் பங்கேற்க செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT