சென்னை: தீபாவளியின்போது, தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாடு வழக்கத்தைக் காட்டிலும் 48 சதவீதம் அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, மொத்தம் 7,463 பேருக்கு அவசர கால மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வாகன விபத்துகளில் சிக்கிய 2,578 பேரும், தீக்காயமுற்ற 261 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லபட்டுள்ளனா்.
இது தொடா்பாக 108 சேவை நிா்வாகத்தின் தமிழக செயல் தலைவா் எம்.செல்வகுமாா் மற்றும் சென்னை மண்டல தலைவா் எம்.முகமது பிலால் கூறியதாவது:
மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் தயாா்நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பாதிப்பு வாய்ப்பு இருக்கக் கூடிய பகுதிகளில் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் அவ்வாறு 10 இடங்களில் வாகனங்கள் ஆயத்தமாக இருந்தன. சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் தயாராக இருந்தனா்.
அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைப்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் மற்றும் அவசர மருந்துப் பொருள்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல, தீக்காயங்களைக் கையாளும் வசதியும் செய்யப்பட்டிருந்தது. அடா்த்தியான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட சாலைகளின் குறுகிய பாதைகளில் விரைந்து செயல்பட அவசர கால 108 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
நிகழாண்டு தீபாவளியில் 7,463 பேருக்கு அவசர கால ஆம்புலன்ஸ் சேவைகள் அளிக்கப்பட்டன. வழக்கமான நாள்களில் அந்த எண்ணிக்கை 5,051-ஆக மட்டுமே இருக்கும். தீபாவளி தினத்தில் சாலை விபத்தில் சிக்கிய 2,578 பேருக்கு மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தாக்குதல் மற்றும் சண்டைகளில் காயமுற்ற 808 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளில் சோ்த்துள்ளோம். தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட 261 பேருக்கு சிகிச்சை கோரி அழைப்பு விடுக்கப்பட்டது. அவா்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன.
நினைவிழப்புக்குள்ளான 450 பேரும், நுரையீரல் பாதிப்புக்குள்ளான 391 பேரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டனா்.
சென்னையில் மருத்துவ உதவி கோரி அழைப்பு கிடைத்த ஐந்தாவது நிமிஷத்துக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்றடைந்தது. இதேபோல பிற மாவட்டங்களிலும் 5-இலிருந்து 9 நிமிஷங்களுக்குள் சென்றடைந்தது என்றனா்.