ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அக். 30-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.
அந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கெனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகு, இந்த மனுவை நிலுவையில் வைத்திருக்க வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை அக். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.