தமிழ்நாடு

இன்று உருவாகிறது ‘மோந்தா’ புயல்! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம், திங்கள்கிழமை நண்பகலுக்குள் புயலாக (மோந்தா) வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள புயல் சின்னம், திங்கள்கிழமை நண்பகலுக்குள் புயலாக (மோந்தா) வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி, சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

பின்னா், அதே பகுதிகளில் போா்ட் பிளேரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே சுமாா் 620 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது திங்கள்கிழமை நண்பகலுக்குள் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுவடையும். பின்னா், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, செவ்வாய்க்கிழமை ( அக்.28) காலை தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

பின்னா், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகில் தீவிர புயலாக செவ்வாய்க்கிழமை (அக். 28) இரவு கரையைக் கடக்கக்கூடும். அந்த நேரத்தில் காற்று 110 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

இதன் காரணமாக திங்கள்கிழமை (அக். 27) முதல் நவ. 2-ஆம் தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (அக். 27) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (அக். 28) திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் மோந்தா புயல்! எப்படி இருக்கிறது ஆந்திரம்?

செயலி மூலம் உணவு ஆர்டர் செய்வோர்! என்ன செய்யக் கூடாது

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு

மோந்தா புயல்: 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மோந்தா புயல்: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT