உலக வானிலை முறையை மாற்ற கூடாது என தமிழக பேரிடர் மேலாண்மைத் துறைக்கு தென்காசி வெதர்மேன் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
தமிழகத்தில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கட்டுப்பாட்டில் 564 சாதாரண மழைமானிகள் உள்ளன. இந்த மழைமானிகளில் பதிவாகும் மழை அளவுகள் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களால் கணக்கிடப்பட்டு தமிழக பேரிடர் மேலாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மழை அளவுகள் பொதுவாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் ஒரு முறை அளவிடப்படுகின்றன. மேலும், வானிலை ஆய்வு மையமும் இந்த அளவீட்டை தினமும் காலை 8.30 மணிக்கு முடிக்கிறார்கள். இது தான் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பின்பற்றபடும் முறை. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது காலை 6 மணிக்குள்ளாகவே மழை அளவுகளை அளவிட மாவட்ட நிர்வாகங்களை கட்டாயப்படுத்துகிறார்கள்.
8.30 மணிக்கு எடுக்க வேண்டிய மழை அளவை ஒரு 7.30 அல்லது 8 மணிக்குள் அளக்க சொன்னால் பரவாயில்லை. ஆனால், 6 மணிக்கு முன்பாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள மழைமானிகளில் மழை அளவு எடுக்கச் சொல்வது முற்றிலும் தவறானது. எனவே தமிழக பேரிடர் மேலாண்மை துறை இந்த நிலையே மாற்ற வேண்டும்.
மேலும், 6 மணிக்கு முன்பே மழை அளவை அளவிடச் செல்வது அனைவருக்கும் சிரமமாகவே இருக்கும். மலைப்பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களில் காலை 6 மணிக்குள்ளாகவே அளவுகளை கணக்கிடுவது சாத்தியமற்றது என்பதையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
நிலையான கால அளவு: காலை 8.30 மணி என்பது 24 மணி நேர காலத்தின் முடிவைக் குறிக்கும் ஒரு நிலையான நேரமாகும். வானிலை தரவுகளை ஒப்பிடுவதற்கு இது மிகவும் முக்கியம்.
தரவு ஒப்பிடுதலுக்கான பொதுவான நடைமுறை: வானிலை ஆய்வாளர்கள் உலகம் முழுவதும் இதே நடைமுறையைப் பின்பற்றுவதால், பல்வேறு பகுதிகளின் மழை அளவுகளை ஒப்பிடுவது எளிதாகிறது மேலும் , மழை அளவு பற்றிய பதிவுகள் சீராகவும், துல்லியமாகவும் இருக்கும்.
எனவே நமது மாநிலத்தின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள 564 மழைமானிகளிலும் காலை 8.00 முதல் 8.30 மணிக்குள் மழை அளவுகளை கணக்கிட தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த மழைமானிகளில் பதிவாகும் மழை அளவுகளை வைத்தே மாவட்ட சராசரி மற்றும் மாநிலத்தின் சராசரி கணக்கிடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பருவ காலத்திலும் தமிழகம் எந்தளவு மழையை பெற்றிருக்கிறது என்ற ஆய்வையும் இந்திய வானிலை ஆய்வு மையம் மேற்கொள்கிறது.
எனவே, எதிர்கால காலநிலையை கருத்தில் கொண்டும் உலக வானிலை விதிமுறைகளை பின்பற்றியும் காலை 8.30 மணிக்கு மழை அளவுகளை கணக்கிட தமிழக பேரிடர் மேலாண்மை துறை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகரும் மோந்தா புயல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.