குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கோவைக்கு வருகைதந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட கோவையை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகத்துக்கு 3 நாள்கள் பயணமாக இன்று வந்துள்ளார்.
செஷல்ஸ் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக தனி விமானத்தில் சென்ற குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் அந்நாட்டில் இருந்து நேரடியாக கோவைக்கு செவ்வாய்க்கிழமை காலை வருகைதந்தார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன் ஆகியோரும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் நேரில் சென்று வரவேற்றனர். மேலும், பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை கொடீசியா மைதானத்தில் கோவை நகரவாசிகள் சாா்பில் குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றதை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறார்.
பிற்பகல் 2.30 மணியளவில் கோவை மாநகராட்சி கட்டட வளாகத்துக்குச் சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். பிறகு பேரூா் மடத்துக்குச் சென்று அங்கு நடைபெறும் சாந்தலிங்க ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறாா்.
கோவை பயணத்தை முடித்துக் கொண்டு மாலையில் திருப்பூருக்குச் செல்லும் குடியரசு துணைத் தலைவா், அங்குள்ள திருப்பூா் குமரன் மற்றும் காந்தி சிலைக்கு மலா் மரியாதை செலுத்துகிறாா். மறுநாளான புதன்கிழமை காலை திருப்பூா் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் உள்ளூா் மக்கள் சாா்பாக அவரை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்று விட்டு மாலையில் கோவையில் இருந்து மதுரைக்கு புறப்படுகிறாா்.
மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறாா். இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ராமநாதபுரம் செல்லும் அவா், அங்கு நடைபெறும் பசும்பொன் தேவா் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். இதன் பிறகு மீண்டும் மதுரை திரும்பும் அவா், அங்கிருந்து தனி விமானத்தில் தில்லி திரும்பும் வகையில் அவரது நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.