சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் விற்பனையாளரின் தலையில் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்த வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டை விஜயராகவன் தெருவில் வள்ளலார் நகர் மேம்பாலத்தின் கீழே நியாயவிலைக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை 60 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டடத்தில் மேம்பாலத்தின் கீழ் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நியாயவிலைக் கடையின் மேற்கூரை சிதிலம் அடைந்திருந்த நிலையில், நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரியும் ஜெயந்தி (50) என்பவர் மீது கடையில் உள்ளே உள்ள சுவர் பெயர்ந்து மேலே இடிந்து தலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை சக ஊழியர்கள் மற்றும் மக்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயந்தியின் கணவர் மற்றும் பிள்ளைகள் தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெயந்தியின் கணவர் குணாளன் இது குறித்து கூறும்போது, எனது மனைவி நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். தான் ஒரு தனியார் கூரியரில் வேலை செய்து வருகிறேன் எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
தற்போது ஜெயந்தி பணிபுரியும் நியாயவிலைக் கடை பழமை வாய்ந்தது. இந்த கடை பாலத்தின் கீழ் உள்ளதால், இது மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளது.
மேலும் பலமுறை நாம்கோ மேலாண்மை இயக்குனர் சுதாவிடம் சிதலமடைந்தது பற்றி தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நியாயவிலைக் கடையின் பின்புறம் ரயில்வே கேட்டு உள்ளதால் தேள், பூரான், பாம்பு உள்ளிட்டவையும் கடைக்குள் இருக்கும் என்றார்.
நியாயவிலைக் கடையை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தனது மனைவிக்கு கடை மாற்றி வேலை போடும்படி சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கடையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ரேஷன் பொருள்கள் வாங்கிச் செல்வதாகவும் பொதுமக்கள் வந்திருந்த நேரத்தில் கற்கள் விழுந்திருந்தால் மக்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நியாயவிலைக் கடை அதிகாரிகள் யாரும் வந்து தனது மனைவியை பார்க்கவில்லை என்றும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயந்தியின் கணவர் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Seller seriously injured after fair price shop roof collapses near Washermanpet, Chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.