பாகிஸ்தானில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்தது: 8 பெண்கள் பலி, 30 பேர் காயம்!
பாகிஸ்தானில் அரசு கட்டடம் இடிந்து விழுந்து பற்றி..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அரசு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் எட்டு பெண்கள் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் லாகூரிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் உள்ள ரஹீம் யார் கான் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் பெனசீர் வருமான ஆதரவுத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விரும்பிய ஏராளமான பெண்கள், திபா மித்தியார் சக் கிராமம் 123ல் அமைந்துள்ள பிஐஎஸ்பி பெண்கள் மையத்தில் கூடியிருந்தனர். அப்போது அங்குள்ள கூரை திடீரென இடிந்து விழுந்ததாக மாவட்ட துணை ஆணையர் ஜஹீர் அன்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த சுமார் 40 பெண்கள் ரஹீம் யார் கான் நகரில் உள்ள ஷேக் சயத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களில் எட்டு பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
காயமடைந்த சில பெண்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என துணை ஆணையர் தெரிவித்தார்.
பழுதடைந்த நிலையில் ஒரு கட்டடத்தில் பிஐஎஸ்பி மையத்தை இயக்கியதற்காக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு கோரியுள்ளனர்.
பஞ்சாப் மாநில முதல்வர் மரியம் நவாஸ் இத்துயரச் சம்பவம் குறித்துத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்; மேலும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்கச் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.