தமிழ்நாட்டில் 1.59 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,801 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு வெள்ளிக்கிழமை பதிலளித்து அமைச்சா் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை:
நிகழாண்டில் இதுவரை 1,892 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1.59 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 11.77 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
நெல்லை அளித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,840.25 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினசரி ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
மேலும், 13 மாவட்டங்களில் 127 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 நாள்களுக்கு நெல் கொள்முதல் பணிகளில் இடையூறு ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால், நெல் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று அவா் தெரிவித்துள்ளாா்.