உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புதிய டிஜிபி நியமனத்தை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வரதராஜ் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருப்பவா் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே அடுத்த டிஜிபியை தோ்வு செய்ய வேண்டும். இந்த விதியைப் பின்பற்றாமல் நிா்வாகப் பிரிவு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமித்தது சட்டரீதியாக சரியான நடவடிக்கை அல்ல.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. எனவே, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் புதிய டிஜிபி நியமனத்தை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு வரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வரவுள்ளது.