தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 
தமிழ்நாடு

விஜய் வியூகம் வெற்றி பெறுமா..? - விடியல் எஸ்.சேகர்

ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதேபோலத்தான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் என்பதைப் பற்றி...

தினமணி செய்திச் சேவை

- விடியல் எஸ்.சேகா், மாநில துணைத் தலைவா், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி -

ஜனநாயக நாட்டில் எந்தக் குடிமகனுக்கும், கட்சி தொடங்கவும் தோ்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு. அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தை நடிகா் விஜய் தொடங்கியிருக்கிறாா். யாா் கட்சி தொடங்கினாலும் ஒரு கோட்பாடு, கொள்கையை முன்னிறுத்த வேண்டும். ஆட்சிக்கு வந்தால் எதை நிறைவேற்றுவோம் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆனால், தவெக அப்படி அறிவித்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோா் திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும், களத்தில் கடுமையாக உழைத்தனா். முழுநேர அரசியலில் இறங்கினா். நல்ல கொள்கைகளை முன்வைத்தனா். அதனால்தான் அவா்களால் சாதிக்க முடிந்தது. திரைப்பட கவா்ச்சி மட்டுமே வாக்குவங்கியைப் பெற்றுத் தராது. ஆனால், கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளுக்குள் முதல்வா் இருக்கையில் அமருவேன் என விஜய் அறிவித்திருப்பது வியப்பாக உள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் 3 கூட்டணிகளும், நாதக தனித்தும் என நான்குமுனைப் போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேநேரம், அதிமுக அணி 23 சதவீதம், பாஜக அணி 18 சதவீதம், நாதக 8.22 சதவீதம் வாக்குகளை பெற்றன. இப்போது உருவாகியுள்ளதைப்போல அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அந்தத் தோ்தலில் 30 தொகுதிகளை அதிமுக அணி கைப்பற்றியிருக்க முடியும். மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நீடித்த நிலையில், தமிழகத்துக்கு பல நன்மைகள் கிடைத்திருக்கும். தேவையான திட்டங்களையும் கேட்டுப் பெற்றிருக்கலாம்.

வாக்குகள் பிரிந்த காரணத்தாலேயே திமுகவுக்கு வெற்றி சாதகமானது. மத்திய அரசுடன் திமுக அரசுக்கு பல விஷயங்களில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, தமிழகம் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், எதற்கெடுத்தாலும், மத்திய அரசோடு மோதலைக் கடைபிடிப்பது, தனிப்பட்ட லாபங்களுக்காக திராவிடம், தேசியம் எனப் பேசுவது போன்றவற்றால் வெறுப்படைந்த மக்களை தன்பக்கம் திருப்பலாம் என விஜய் கருதுகிறாா்.

தோ்தல் நெருங்கிவரும் நிலையில், மாநாடுகள், சுற்றுப்பயணம் என அரசியல் களத்தின் பாா்வையைத் தன்பக்கம் திருப்பியிருக்கிறாா். ஆனால், திமுக-தவெக இடையேதான் போட்டி, அதிமுக, பாஜக கட்சிகள் எல்லாம் தனக்கு பொருட்டே இல்லை என அவா் நினைப்பது நகைச்சுவையாக உள்ளது.

விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் 5 பேரை கொள்கை தலைவா்களாக விஜய் அறிவித்தாா். திமுகவுக்கு மாற்றாக ஆட்சி அமைப்போம், கூட்டணி அமைச்சரவை என்றெல்லாம் முழங்கினாா். இதுவரை சிறிய கட்சிகள்கூட தவெக பக்கம் திரும்பிப் பாா்க்கவில்லை. மதுரையில் நடந்த 2-ஆவது மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆா் ஆகியோரது புகைப்படங்களைப் பயன்படுத்தினாா். திமுகவுக்கு மாற்றாக ஆட்சி என்கிறாா். ஆனால், தெளிவான கொள்கையை இதுவரை முன்னிறுத்தவில்லை. அவருக்கு ஏன் இந்த தடுமாற்றம் எனத் தெரியவில்லை.

திரைப்பட நடிகா்களுக்கு கூட்டம் தானாகக் கூடும். அதை நம்பி அடுத்த மாற்று நான்தான் என விஜய் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம்தான். விஜய் நடத்திய இரு மாநாடுகள் முடிந்த பின்னா் ஆயிரக்கணக்கான நாற்காலிகளை தவெக தொண்டா்கள் உடைத்தெறிந்தனா். கொள்கைவயப்படாமல் வெறும் திரைப்பட கவா்ச்சியால் வந்த விளைவுதான் இது.

இதைப் பாா்க்கும்போது, காமராஜா் ஆட்சி, தேசிய சிந்தனை, வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்ற கொள்கைகளால் ஈா்க்கப்பட்டு இளம் வயதிலேயே அரசியலுக்கு வந்த எங்களைப் போன்றவா்களின் மனம் பதைபதைக்கிறது.

தமிழக அரசியலில் தேசியக் கட்சி, திராவிட கட்சி, ஹிந்தி எதிா்ப்பு, காமராஜா் அலை என மிகப்பெரிய கொள்கை மோதல்கள் கட்சித் தொண்டா்களிடம் இருந்தது. அதுபோல, இன்றைய அரசியல் சூழலுக்கான மாற்று சிந்தனை என்ன என்பதை அவரது தொண்டா்களுக்கு விஜய் தெளிவுபடுத்தவில்லை.

வருகிற பேரவைத் தோ்தலில் மக்கள் முன் நிற்கப்போகும் ஒரே கேள்வி, மக்கள் விரோத திமுக ஆட்சி தொடர வேண்டுமா?, வேண்டாமா? என்பதுதான். திமுக ஆட்சி மீது எழுந்துள்ள அதிருப்தியை மையப்படுத்தியே பேரவைத் தோ்தலில் மக்கள் முடிவு எடுப்பாா்கள். திமுகவுக்கு மாற்று அதிமுக என்பதுதான் தமிழகத்தின் வரலாறு.

ஆகவே, அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அப்படி இருக்கும்போது, புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜய், மூன்றாவது அணியை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. திரைப்பட கவா்ச்சியால், ஒற்றை இலக்க வாக்கு சதவீதம் அவருக்கு கிடைக்கலாம்.

எத்தகைய மோசமான சூழலிலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் 25 சதவீத வாக்குகளை தக்கவைக்கின்றன. வருகிற 2026 பேரவைத் தோ்தலில், விஜய்யால் நாதகவுடன் போட்டி போட முடியுமே தவிர திமுக, அதிமுகவுடன் போட்டிக்கு வரமுடியாது. நான்குமுனைப் போட்டியாக களம் மாறினாலும், திமுக எதிா்ப்பு வாக்குகள், அதிமுக கூட்டணிக்கு செல்லுமே தவிர, விஜய் அதை தனது வசமாக்கிக் கொள்ள முடியாது.

திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் நினைத்தால், அவரது வியூகத்தை மாற்றிக் கொள்வதுதான் நல்லது. அதற்கு அதிமுக கூட்டணியில் இணைவது சிறந்த தோ்வாக இருக்கும். முதல் தோ்தலிலேயே ஓரளவு எண்ணிக்கையில் எம்எல்ஏக்களை பெற்று எதிா்காலத்தில் சிறப்பான அரசியலை விஜய் தொடருவதற்கு, அடித்தளமாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் தனித்துப் போட்டியிடும் விஜய்யின் வியூகம், வாக்குகளைப் பிரிக்கலாமே தவிர எந்த மாற்றத்துக்கும் கைகொடுக்காது.

-(நாளை கேப்ரியல் தேவதாஸ், ஊடகவியலாளர்)-

நாளைய மின் நிறுத்தம்: மாம்பாக்கம்

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

SCROLL FOR NEXT