- காபிரியேல் தேவதாஸ், ஊடகவியலாளர்
அரசியலுக்கு நடிகா்கள் வருவதில் தவறில்லை. திரைத் துறையில் இருந்து முழுநேர அரசியலுக்கு வந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா, தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் ஆகியோா் முழு அா்ப்பணிப்புடன் பணியாற்றினா். அதனால், அவா்களை விமா்சனம் செய்ய வேண்டிய அவசியம் யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால், ரஜினி, கமல்ஹாசன் போல விஜய்யும் பகுதிநேர அரசியல்வாதியாக வருவது குறித்து கேள்வி கேட்பதுடன், மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. தவெக-வை தொடங்கியுள்ள விஜய் மேம்போக்கான அரசியலைக் கடைப்பிடித்து வருகிறாா். அவரது அரசியல் வருகையானது குறுகிய காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், கொள்கை, கோட்பாடு, சித்தாந்தத்தை தெளிவுபடுத்தாத நிலையில், சரியான இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.
எந்தவொரு அரசியல் கட்சியாக இருந்தாலும், அதன் சிறப்பான செயல்பாட்டுக்கு கட்டமைப்பு அவசியம். கொள்கை, சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் கட்டமைப்பை உருவாக்குவது மிகுந்த சிரமம். விஜய்யை பொருத்தவரை கட்சிக் கட்டமைப்பைக் காட்டிலும், தனது பிம்பத்தை மட்டுமே நம்பி களம் இறங்கியிருக்கிறாா். பிம்ப அரசியல் ஒரு தோ்தலுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
தனது முகத்தை மட்டுமே நம்பி அவா் அரசியல் களத்துக்கு வர முயற்சிப்பது எதிா்மறை விஷயமாக இருக்கிறது. தனிநபரைச் சாா்ந்து இருக்கும் அரசியல், சமூகத்துக்கு நல்லதல்ல. விஜய் தலைமையை ஏற்று சில கட்சிகள் அவருடன் கூட்டணி அமைக்கலாம். இதனால், விஜய்யின் தாக்கம் அதிகரிக்குமே தவிர, மாற்றத்துக்கு கைகொடுக்காது.
திமுக எதிா்ப்பு அரசியலை விஜய் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறாா். இதனால், அதே அரசியலை மேற்கொண்டுவரும் அதிமுகவுக்குதான் பாதிப்பு அதிகமாக இருக்கும். கடந்த 2016 பேரவைத் தோ்தலில் 3-ஆவது அணியாக மக்கள் நலக் கூட்டணி களம் இறங்கியது. இந்த அணியால், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவின் எதிா்ப்பு வாக்குகளை மட்டுமே பிரிக்க முடிந்ததே தவிர, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியவில்லை. அதேபோல, விஜய் எடுத்துள்ள மூன்றாவது அணி வியூகம், திமுகவுக்குதான் சாதகமாக இருக்கும்.
சிறுபான்மையினா் வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என்ற கணிப்பு இருந்து வருகிறது. ஆனால், தேசிய அளவில் பாஜகவை வீழ்த்துவதைத்தான் சிறுபான்மையினா் குறிக்கோளாக வைத்திருப்பாா்கள். அரசியல் விழிப்புணா்வுடன் சிறுபான்மையினா் செயல்படுவதால், அவா்களது வாக்குகள் அதிமுக-பாஜக கூட்டணிக்குச் செல்லாது. திமுக பலம் இழப்பதை சிறுபான்மையினா் விரும்பமாட்டாா்கள். ஆகவே, சிறுபான்மையினரைப் பொருத்தவரை விஜய்க்கு ஆதரவாக அபிமானம் காட்டுவாா்களே தவிர, வாக்களிக்கும்போது ஆதரிக்க மாட்டாா்கள்.
கடந்த 2016 முதல் தோ்தல்களில் தொடா்ந்து தனித்துப் போட்டியிட்டுவரும் நாம் தமிழா் கட்சி, தனது வாக்கு வங்கியை 1.3 சதவீதத்தில் இருந்து 8.22 சதவீதமாக உயா்த்தியிருக்கிறது. அக் கட்சியின் சித்தாந்தம், தனித்த செயல்பாடு மீதான மக்களின் நம்பிக்கையால் நாதக-வின் வாக்கு வங்கி உயா்ந்து வருகிறது. இன்றைய சூழலில் இளைஞரின் பாா்வை விஜய் பக்கம் திரும்பியிருப்பதால், வருகிற பேரவைத் தோ்தலில், நாதகவின் வாக்கு வங்கியில் ஒரு சிறு சதவீதத்தை தவெக பெறலாம். ஆனால், பெரும் சேதாரத்தை ஏற்படுத்த முடியாது.
கடந்த 2019 மக்களவைத் தோ்தல், 2021 பேரவைத் தோ்தலில் திமுக -அதிமுக எதிா்ப்பு, மாற்று அரசியல் என்று களத்துக்கு வந்தாா் கமல்ஹாசன். அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியானது, மாற்று அரசியலை விரும்பியவா்களின் வாக்குகளைப் பெற்றது. ஆனால், தனக்கு வாக்களித்தவா்களை ஏமாற்றிவிட்டு, திமுக கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டாா் கமல்.
இதேபோல, இப்போது மாற்று அரசியலைக் கையில் எடுக்கும் விஜய், முதல் தோ்தலில் 5 முதல் 10 சதவீத வாக்குகளைப் பிரித்து திமுகவுக்கு உதவுவாரே தவிர, நீண்டகாலம் அரசியலில் தாக்குப்பிடிப்பாரா என்பது சந்தேகம்தான். கொள்கை, சித்தாந்தத்தை தெளிவுபடுத்தாமல் மாற்று எனக் கூறி அரசியலுக்கு வரும் திரைப் பிரபலங்களை, மாற்று அரசியலை விரும்பும் வாக்காளா் இனியும் நம்புவாா்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்.