அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். அதன்படி 5-ஆம் கட்ட பிரசார சுற்றுப்பயணம் செப்.17 முதல் செப்.26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் செப்.17-ஆம் தேதி பிரசாரத்தைத் தொடங்கும் அவா், முதல் நாளில் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூா் ஆகிய இடங்களிலும், செப். 18-இல் பாலக்கோடு, பென்னாகரம், 19-இல் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம், 20-இல் நாமக்கல், பரமத்திவேலூா், 21-இல் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறாா்.
தொடா்ந்து, செப்.23-இல் நீலகிரி மாவட்டம் குன்னூா், உதகை, 24-இல் கூடலூா், 25-இல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா், கரூா் மாவட்டம் கரூா் நகரம், 26-இல் அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம் தாகம்பட்டி, குளித்தலை, தோகைமலை ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.