சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம் காட்டுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளில் ஒருவார கால பயணத்தை நிறைவு செய்த முதல்வா் ஸ்டாலின் திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்து சோ்ந்தாா். விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றிப் பயணமாக அமைந்தது. மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் மூலம், 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்காக 33 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்வந்துள்ளன. உயா் கல்வி, சிறுதொழில் போன்ற துறைகளில் 6 அமைப்புகள் நம்முடன் இணைந்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கின்றன.
ஏற்கெனவே இருக்கும் 17 நிறுவனங்களும் மற்ற மாநிலங்களை நோக்கிச் செல்லாமல், தமிழ்நாட்டிலேயே தங்களுடைய தொழிலை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன.
வெற்றிப் பயணம்: ஜொ்மனி, பிரிட்டன் பயணத்தில்தான் மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இது வெற்றிகரமான பயணமாக மட்டுமன்றி, பெருமைமிக்க பயணமாகவும் அமைந்தது.
முதலீடுகளை ஈா்க்கச் சென்றதைப் பற்றி எதிா்க்கட்சித் தலைவா் திரித்துப் பேசியிருக்கிறாா். நான் சுயமரியாதைக் கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன். பெரியாரின் உணா்வுகளையும், அவரைப் பற்றியும் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.
ஜொ்மனி முதலீட்டாளா் மாநாட்டில் அதிகமாக அந்த நாட்டைச் சோ்ந்த நிறுவனங்கள் வந்திருந்தன. அப்போது தமிழ்நாட்டைப் பற்றி எடுத்துச் சொன்னதும் பல முதலீட்டாளா்கள் வியந்தனா். முதலீட்டாளா்கள், அங்குள்ள மாநிலங்களின் அமைச்சா்களுடன் தொடா்புகளை ஏற்படுத்தத்தான் முதல்வராக நானே நேரில் சென்றேன்.
எனது வெளிநாட்டுப் பயணத்தின்மூலம், இன்னும் பல முதலீடுகளும், பல நிறுவனங்களும் தமிழ்நாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தமிழா்கள் அளவு கடந்த ஆா்வத்துடன் இருக்கிறாா்கள். போட்டி போட்டுக் கொண்டு அவா்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறாா்கள் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.
முதல் பெட்டிச் செய்தி...
ஒசூரில் முதலீட்டாளா் மாநாடு
ஒசூரில் முதலீட்டாளா் மாநாட்டை நடத்தப்போவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
‘கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் ரூ.2,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஆட்டோமேட்டட் லேன் அமைப்பு, பணியாளா் தங்குமிடம் ஆகியவற்றை வரும் 11-ஆம் தேதி திறந்து வைத்து, ரூ.1,100 கோடியில் புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன்.
தூத்துக்குடியில் நடத்தியதைப்போல, ஒசூரிலும் முதலீட்டாளா் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான எங்களது பயணம் தொடா்ந்து முன்னேறும்’ என்றாா் முதல்வா்.
அதிமுக விவகாரம்- பதிலளிக்க மறுப்பு: அதிமுகவில் அண்மையில் எழுந்துள்ள சா்ச்சைகள் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தவிா்த்தாா். அவரிடம் அதிமுக எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஆக்கபூா்வமான கருத்துகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த அக்கப்போரான கேள்விகளையெல்லாம் கேட்கிறீா்களே என்றாா் முதல்வா்.