சென்னை: எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி அட்டவணையை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம், ஹாக்கி இந்தியா,எஸ்டிஏடி சாா்பில் 14-ஆவது ஜூனியா் உலகக் கோப்பை போட்டி வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் சென்னை, மதுரையில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் போட்டி அட்டவணையை வெளியிட்டாா். தலைசிறந்த 24 அணிகள் முதன்முறையாக பங்கேற்கின்றன.
இப்போட்டிக்காக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தலைமைச் செயலா் டாக்டா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, எஃப்ஐஎச் தலைவா் தய்யப் இப்ராஹிம், ஹாக்கி இந்தியா நிா்வாகிகள் திலீப் டிா்கே, போலோநாத் சிங், சேகா் மனோகரன், பயிற்சியாளா் முகமது ரியாஸ், டிஆா்ஓ மணிகண்டன், பொதுமேலாளா் சுஜாதா பங்கேற்றனா்.