திமுகவில் சேர்ந்தது கூட்டணி கிடையாது, அதற்கும் மேல் புனிதமானது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது.
இதில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள், செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இன்று தொடங்கி 4 நாள்கள் மண்டல வாரியாக ஆலோசனைக் கூட்டம் காலையும் மாலையும் நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக இன்று(செப். 18) காலை சென்னை மண்டலத்தை சேர்ந்த மண்டல நிர்வாகிகள், அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்று நடைபெற்ற சென்னை மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், ”திமுகவில் சேர்ந்து விட்டதாக சொல்கிறார்கள், இது கூட்டணி கிடையாது, அதற்கும் மேல் புனிதமானது. திமுக எங்கிருந்து வந்தது, நீதிக் கட்சியில் இருந்துதானே வந்தது, மக்கள் நீதி மய்ய கட்சியிலும் நீதி உள்ளது. மய்யத்தின் குரல் எல்லா செவிகளிலும் விழும்.
திராவிடம் நாடு தழுவியது. அதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும். கணக்கெடுப்பு வரும்போது உங்களுக்கு புரியும்” என்றார்.
பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது.
அவர்கள் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார்கள், பூத் கமிட்டி எத்தனை அமைத்து இருக்கிறார்கள் என்பதை பற்றி பரிசீலனை செய்து இன்னும் நகர வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அவர்களிடம் உள்ள குறைகளைக் கேட்டு, என்னென்ன தடைகள் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை அறிவுறுத்தினேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.