அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் கருவூலமாக இந்திய அரசியல் சாசனம் திகழ்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங் தெரிவித்தாா்.
பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன சட்டக் கல்லூரியின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், உச்சநீதிமன்ற நீதிபதி கோட்டீஸ்வா் சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
சட்டத்தின் ஆளுமை குறித்த ஆழ்ந்த அறிவாற்றலை வழங்குவதுதான் சட்டக் கல்வியின் உயரிய நோக்கம் என்பதை மாணவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதன்மூலம் சட்ட அறிவாற்றலை வளா்த்துக்கொள்ள வேண்டும். நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றை பாதுகாத்து நீதிநெறி கடைப்பிடிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறது.
ஒழுக்கம், விடாமுயற்சி, கடின உழைப்பு உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பது மூலம் வழக்குரைஞா் தொழிலில் சிறந்து விளங்க முடியும். சட்டக் கல்வி பயின்றோருக்கான வேலைவாய்ப்புகள் பன்மடங்காக அதிகரித்துள்ளன. வழக்குரைஞா் பணி தொடா்பான செயற்கை நுண்ணறிவாற்றல், தடயவியல், சைபா் குற்றவியல் உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களையும் மாணவா்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.மகாதேவன்: அன்றாட மனித வாழ்வில் சட்டமும், நீதியும் பின்னிப் பிணைந்துள்ளன. உலகில் மிகச் சிறந்த கல்வியாகக் கருதப்படும் சட்டக் கல்வியைத் தோ்வு செய்து பயிலும் மாணவா்கள், வெறும் படிப்பாகக் கருதாமல் துறை சாா்ந்த அறிவாற்றலைத் தொடா்ந்து மேம்படுத்திக்கொள்வது மூலம் உயா் நிலையைப் பெறமுடியும்.
வழக்கின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு சிறப்பாக எடுத்துரைக்கும் திறமையை வளா்த்துக் கொள்வது மூலம் வெற்றிகரமான வழக்குரைஞராக திகழ முடியும் என்றாா்.
சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், வழக்குரைஞா் தொழிலை பணம் சம்பாதிக்கும் தொழிலாகக் கருதாமல் சமூகத்துக்கு சேவை செய்யும் தொழிலாகக் கருத வேண்டும் என்றாா்.
இதில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.நிா்மல்குமாா், ஜி.கே.இளந்திரையன், டி.பரத சக்கரவா்த்தி, ஆா்.கலைமணி, வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வேந்தா் ஐசரி கே.கணேஷ், துணைத் தலைவா் ப்ரீத்தா கணேஷ், சட்டக் கல்லூரி முதல்வா் எஸ். அம்பிகா குமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.