ரேவந்த் ரெட்டி 
தமிழ்நாடு

தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல்வா் பங்கேற்பு

தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகம் கல்வியில் சாதனைகள் படைத்ததற்காக, சென்னையில் வருகிற செப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கவுள்ளாா்.

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:

கல்வியில் சாதனைகள் படைக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பெரிய விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்.25-ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை தமிழக அரசின் மிக முக்கியமான ஏழு திட்டங்கள் தொடா்பான விளக்க நிகழ்வுகள் நடைபெறும். இதில், அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகள் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொள்வா். இந்த விழாவில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி பங்கேற்கிறாா்.

தமிழக அரசின் ஏழு முக்கிய திட்டங்களில், ‘நான் முதல்வன்’ திட்டம் மூலமாக, 14.60 லட்சம் போ் பயன்பெற்றுள்ளனா். பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்று 41 லட்சம் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறாா்கள். ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ மூலமாக 37 ஆயிரத்து 416 பள்ளிகளைச் சோ்ந்த 20.59 லட்சம் மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 5.29 லட்சம் கல்லூரி மாணவியரும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் 3.92 லட்சம் மாணவா்களும் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனா்.

கல்வித் துறையைப் போன்றே விளையாட்டுத் துறைக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. விளையாட்டு உள்கட்டமைப்புக்காக மட்டும் ரூ.548 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதுபோன்று கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்காக செய்யப்பட்ட திட்டங்கள், அதனால் விளைந்த பயன்கள் அனைத்தும் செப்.25-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா்.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோா் உடனிருந்தனா்.

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

காஸா சிட்டி மருத்துவமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

ஆப்கனிலிருந்து விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து தில்லி வந்த சிறுவன்!

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT