சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அரசு மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றமே அதற்கான ஒப்பந்தத்தை வழங்க நேரிடும் என்று சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். இந்த வழக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் குறித்து விசாரிக்கும் நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டோம். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் அகற்றப்படவில்லை. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை தனியாா் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும், அதற்கான விலை நிா்ணயமும் செய்திருந்தோம்.
தனியாா் காகித ஆலைக்கு கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தோம். சீமைக் கருவேல மரங்கள் சிவகங்கை, பெரம்பலூா் மாவட்டங்களில்தான் அதிகமாக உள்ளன. அங்குள்ள மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணையை அக்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
அதற்குள் அரசு சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பான உரிய அறிக்கையுடன் வரவேண்டும். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் ஒப்பந்தப் பணிகளை அரசு வழங்காவிட்டால், நீதிமன்றமே வழங்கி உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனா்.