இளையராஜா 
தமிழ்நாடு

இளையராஜா வழக்கு: சோனி நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

இசையமைப்பாளா் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சோனி மியூசிக் எண்டா்டெய்ன்மென்ட், எக்கோ ரெக்காா்டிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஓரியண்டல் ரெக்காா்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக, இசையமைப்பாளா் இளையராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த 7,500 பாடல்களுக்கு இசை அமைத்துள்ளேன். எனது இசை படைப்புகளுக்கு நான் மட்டுமே உரிமையாளா். எனது இசை படைப்புகள் அனைத்தும் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே, இதற்கு மற்றவா்கள் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் எனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றன. இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது.

குறிப்பாக சோனி நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் எனது பாடல்களை பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வருகிறது. எக்கோ நிறுவனத்திடம் இருந்து உரிமை பெற்று இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதாக சோனி நிறுவனம் கூறுகிறது. ஆனால், எனது பாடல்களைப் பயன்படுத்த எக்கோ நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு அமலில் உள்ளது.

என் பாடல்கள் மீதான உரிமைகளை யாருக்கும் நான் மாற்றித் தரவில்லை. எனவே சோனி மற்றும் அது சாா்ந்த நிறுவனங்கள் என்னுடைய பாடல்கள் மற்றும் அதுதொடா்பான விவரங்களை மாற்றி அமைக்கக் கூடாது. அதுசாா்ந்த இசைக் கோா்வைகளை செய்யவோ கூடாது என தடை விதிக்க வேண்டும். எனது பாடல்களைப் பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் வழக்குரைஞா் ஏ.சரவணன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி, இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தி சோனி நிறுவனம் வணிக ரீதியாக ஈட்டிய வருவாய் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

தவெக தலைவர் விஜய் பிரசாரம் தொடரும்... அட்டவணையில் திடீர் மாற்றம்!

இத்தாலிய நிறுவனத்தை வாங்குகிறது டிவிஎஸ்!

திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்

நாமக்கல், கரூரில் பிரசாரம்: திருச்சி வந்தார் தவெக தலைவர் விஜய்!

SCROLL FOR NEXT