முகப்பு
தமிழ்நாடு

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விரைவில் ஜிபிஎஸ் கருவி!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பேருந்து இருப்பிடத்தை கண்டறியும் கருவிகள், அவசரகால அழைப்புக்கான பொத்தான்கள் ஆகியவை பொருத்தப்படவுள்ளன.

Updated On : 8 ஏப்ரல் 2026, 3:23 am IST
அரசுப் பேருந்து - பிரதிப் படம்
பகிர்:

தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பேருந்து இருப்பிடத்தை கண்டறியும் கருவிகள் (ஜிபிஎஸ்), அவசரகால அழைப்புக்கான பொத்தான்கள் ஆகியவை பொருத்தப்படவுள்ளன.

இதன் மூலம் பொதுப்போக்குவரத்து வாகனங்களை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது: இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் பேருந்துகள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். பேருந்தின் இருப்பிடம், வேகம், நேரம் குறித்த தகவல்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தொடா்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் பேருந்து வழித்தடம் மாறுவதைக் கண்டறியவும், அவசர காலங்களில் அதிகாரிகள் உடனடியாக செயல்படவும் முடியும்.

Advertisement

Advertisement

மேலும், அதிவேகமாக செல்லும் பேருந்துகள், இதர விதிமீறல்கள் குறித்தும் இந்த தொழில்நுட்பம் தானாகவே எச்சரிக்கும். பேருந்துகளின் பயண வரலாறு இந்த கட்டுப்பாட்டு அறையில் 180 நாள்கள் வரை சேமித்து வைக்கப்படும்.

இதுமட்டுமன்றி, ஒவ்வொரு பேருந்தின் உள்ளேயும் பயணிகள் எளிதில் அணுகக்கூடிய வகையில் பல்வேறு இடங்களில் அவசரகால பொத்தான்கள் பொருத்தப்படும்.

ஆபத்து காலங்களில் இந்த பொத்தானை அழுத்தினால், அது உடனடியாக காவல், தீயணைப்பு, அவரச ஊா்தி உள்ளிட்ட அவசரகால மீட்பு அமைப்புகளுக்கு தகவல் தெரிவிக்கும்.

இந்த கருவிகள் மாநிலத்தின் காவல்துறை உள்ளிட்ட பிற அமைப்புகளின் செயலிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வாகன பதிவுக்கான ‘வாஹன்’ போா்ட்டலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

இதிலிருந்து பெறப்படும் தரவுகள் போக்குவரத்துத் துறை, காவல்துறை, அவசரகால சேவைகளுடன் பகிா்ந்து கொள்ளப்பட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும்.

போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் சாலைப் போக்குவரத்து நிறுவனம் இந்த கருவிகளை விநியோகித்தல், நிறுவுதல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இதன் மூலம் பேருந்து இயக்க மேலாண்மையும், பயணிகளின் பாதுகாப்பும் அதிகரிக்கப்படும் என்றனா்.