இபிஎஸ்ஸுடன் இருப்பதைவிட இறப்பதே மேல்; ஆனால், இப்போது அதே கூட்டணியில்: யாரைச் சொல்கிறார் திருமாவளவன்?
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதைவிட இறக்க விரும்புவதாகக் கூறியோரும், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக திருமாவளவன் விமர்சனம்
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதைவிட இறக்க விரும்புவதாகக் கூறியோரும், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காமராஜபுரத்தில் திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் பேசுகையில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் தொடர்ந்து பயணித்து வருகிறது. அதற்குக் காரணம், பெரியார், அண்ணா உள்ளிட்ட மாமனிதர்களின் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு, விளிம்புநிலை மக்களுக்காகப் போராடுகிற ஓர் இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற புரிதலின் அடிப்படையில்தான்.
திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவனை வெளியேற்றினால், அந்தக் கூட்டணியைப் பலவீனப்படுத்திவிட முடியும், சிதறடித்துவிட முடியும். திமுக கூட்டணி சிதறினால், திமுகவை வீழ்த்திவிட முடியும் என்றெல்லாம் கணக்குப்போட்டு பார்த்தனர்.
Advertisement
பாஜகவை, அதிமுக தனது தோள்களில் சுமந்து செல்கிறது. இந்தக் கூட்டணியை அவர்களால் நியாயப்படுத்த முடியாது.
ஆனால், திமுகவுடனான நாங்கள் ஏன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை தெளிவாக விளக்க முடியும். இந்த அரசியல் கூட்டணியைத் தொடர்வதற்கான காரணங்களை நாம் விளக்கவும் முடியும்.
அதேபோல், பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமியால் நியாயப்படுத்த முடியுமா? எதன் அடிப்படையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது?
பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பெரிய தவறு என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஒருமுறை பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டார். அது அரசைக் கவிழ்ப்பதற்கான முயற்சியாகும் என்றும் ஜெயலலிதா விவரித்தார்.
தான் உயிரோடு இருக்கும்வரையில், ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது என அவர் தெளிவாகக் கூறியிருந்தார். இது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? தெரியாதா?
இந்த கூட்டணியை நியாயப்படுத்த முடியுமா? இல்லை என்பதே பதில்.
அந்தக் கூட்டணியில் (தேசிய ஜனநாயக கூட்டணி) ஒவ்வொரு கட்சியினரும், ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும், வெளிப்படையான சவால்களையும் விடுத்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைப்பதைவிட, இறக்க விரும்புவதாக ஒரு காலத்தில் கூறிய தலைவர்கள், இப்போது அதே கூட்டணியில் ஒரு பகுதியாக உள்ளனர்" என்று தெரிவித்தார்.