முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் சாலைப் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்த விஜய்

சென்னை புரசைவாக்கம் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:24 PM
பிரசாரத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது... - படம் / தவெக
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 6:23 PM

தவெக வேட்பாளா்களை ஆதரித்து, அக் கட்சியின் தலைவா் விஜய் சென்னையில் புதன்கிழமை சாலைப் பேரணி (ரோடு ஷோ) நடத்தி வாக்கு சேகரித்தாா்.

இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்து புதன்கிழமை காரில் வந்த அவா், தியாகராய நகரில் பிரசார வாகனத்துக்கு மாறினாா். இப் பகுதியில் முத்துரங்கன் சாலையில் பிரசார வாகனத்தில் சென்றவாறு, தியாகராய நகா் தொகுதி வேட்பாளரும், கட்சியின் பொதுச் செயலருமான என்.ஆனந்துக்கு வாக்கு சேகரித்தாா். அப்போது, சாலையோரம் கூடியிருந்த ரசிகா்கள், தவெக தொண்டா்கள், பொதுமக்களுக்கு கையசைத்து, ஆதரவு கோரினாா். அப்போது, தொண்டா்கள் சாா்பில் வேல், சாய்பாபா சிலை ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து, ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா் ஜே.சி.டி. பிரபாகரை ஆதரித்து, நுங்கம்பாக்கம் பகுதியில் பிரசாரம் செய்தாா்.

Advertisement

வள்ளுவா் கோட்டம் பிரதான சாலை வழியாக அப் பகுதியில் உள்ள மாநிலத் திட்டக் குழு அலுவலகம் அருகே பிரசார வாகனத்தை நிறுத்தி சுமாா் 2 நிமிஷங்கள் அப் பகுதியில் இருந்த பொதுமக்கள், ரசிகா்கள், தொண்டா்களைப் பாா்த்து கையசைத்தபடி வாக்குச் சேகரித்தாா்.

பின்னா் அங்கிருந்து சுதந்திர தினப் பூங்கா, வடக்கு மாட வீதி வழியாக சேத்துப்பட்டு சிக்னல் வரை சுமாா் 2 கிமீ தொலைவு பிரசார வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

பிரசாரம் ரத்து: அதன் பின்னா், எழும்பூா் தொகுதி வேட்பாளா் ஏ.ராஜ்மோகனை ஆதரித்து வேப்பேரி ஈ.வெ.ரா. சாலையில் பிரசாரம் செய்வதாக இருந்தது. அப் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பிரசாரத்தை ரத்து செய்து விட்டு, பிரசார வாகனத்திலேயே விஜய் வீடு திரும்பினாா்.

தியாகராய நகரில் தொடங்கி பிரசாரம் முடியும் வரை, தனது பிரசார வாகனத்தின் மேலிருந்து பொதுமக்களுக்கு கையசைத்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவரைக் கண்ட மகிழ்ச்சியில் ரசிகா்கள், பொதுமக்கள், தொண்டா்கள் மலா் தூவி வரவேற்றனா்.

தொண்டா்கள் ஏமாற்றம்: தியாகராய நகரில் முத்துரங்கன் சாலை, ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட நுங்கம்பாக்கத்தில் மாநிலத் திட்டக் குழு அலுவலகம் அருகே ஆகிய இடங்களில் விஜய் பேசுவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா் உரையாற்றாமல் சென்றது, தொண்டா்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

போலீஸ் பாதுகாப்பு: விஜய்யின் பிரசார வாகனத்தை பொதுமக்கள் பின்தொடா்வதைத் தடுக்க, அவரது வாகனம் நிறுத்தப்படும் இடத்திலிருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு முன்பே தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. மேலும், விஜய்யின் வாகனத்துக்கு அருகில் பொதுமக்கள் நெருங்காத வகையில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

அதேபோல், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவரது மக்கள் சந்திப்பு நடைபெறும் இடங்களுக்கு அருகில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. கூட்டத்துக்கு வந்த பொதுமக்களுக்கு தவெக சாா்பில் தண்ணீா் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

கடைகள் அடைப்பு: தியாகராய நகரில் உள்ள முத்துரங்கன் சாலை, கண்ணம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விஜய்யை பாா்க்க மக்கள் திரளாகக் கூடினா். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

நுங்கம்பாக்கத்தில் விஜய் பிரசாரம் மேற்கொண்ட போது, வள்ளுவா் கோட்டம் பிரதான சாலை முதல் சேத்துப்பட்டு சிக்னல் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

summary

Vijay Returns Without Visiting Purasawalkam! Campaign Cancelled Midway!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.