முகப்பு
தமிழ்நாடு

மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்

தேர்தலின்போது சில அதிகாரிகளைக் கொண்டு பேருந்து வசதிகளை திமுக அரசு நிறுத்தியதாக தவெக நிர்வாகி நிர்மல் குமார் குற்றச்சாட்டு

Updated On : 25 ஏப்ரல் 2026, 6:21 pm IST
விஜய் | நிர்மல் குமார் | மு.க. ஸ்டாலின் - சித்திரிப்பு
பகிர்:

தேர்தலின்போது போக்குவரத்துத் துறையில் சில அதிகாரிகளைக் கொண்டு பேருந்து வசதிகளை திமுக அரசு நிறுத்தியதாக தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது, "பேருந்து வசதி வேண்டுமென்றே தடை செய்யப்பட்டது. இந்தத் தேர்தலை நடத்திய ஒரு சில அதிகாரிகள்தான். செந்தில்வேல், டேவிட்சன் ஆசிர்வாதம், உமாநாத் ஐஏஎஸ் போன்ற ஒரு சில அதிகாரிகள் சேர்ந்துதான் மொத்த தேர்தலையும் நடத்தினர்.

திமுக சார்பாக ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் தேர்தல் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் இருவருக்கும் பின்னணியாகச் செயல்பட்ட இதுபோன்ற அதிகாரிகள்தான், போக்குவரத்துத் துறையிலிருந்த முக்கிய அதிகாரிகளைக் கொண்டு பெரும்பாலான இடங்களில் பேருந்துகளை நிறுத்தியுள்ளனர். முக்கிய பேருந்துகளெல்லாம் திருப்பி விடப்பட்டுள்ளது. பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. எல்லா பேருந்துகளையும் அந்தந்த பணிமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டன.

Advertisement

Advertisement

குறைந்தபட்சம் 20 லட்சம் பேராவது வாக்களிக்க விடாமல், அவர்கள் அனைவரையும் ரோட்டில் ஒருநாள் முழுவதும் 15 மணிநேரமாக பெண்களும் குழந்தைகளும் உணவின்றி, நீரின்றி அவதியுற்றனர். இது ஒரு மோசமான செயல்.

இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். ஏனெனில், போதுமான பேருந்து வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று ஒரு வாரத்துக்கு முன்பே தேர்தல் ஆணையம் சொல்லியிருந்தது. அதெல்லாம் தெரிந்தே, வேண்டுமென்றே தேர்தலின்போது காலதாமதம் செய்து, யாரையும் வரவிடாமல் செய்து, போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்யாமல், வந்த பேருந்துகளையும் திருப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம்.

இதில் பின்னிருந்து இயக்கும் அதிகாரிகளான டேவிட்சன், செந்தில்வேல், உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகள், திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் போன்று, திமுகவின் அனைத்து தவறுகளுக்கும் துணைநின்று, உடந்தையாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கண்டிப்பாக, ஒரு பெரிய மாற்றம் வரும். 40 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றிய ஒரு கும்பலிடமிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு இடத்திலும் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்" என்று தெரிவித்தார்.

summary

TN Polls 2026: The liberation people have been expecting will be achieved on May 4th, says TVK Leader Nirmal Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.