மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தமிழக மக்களின் உழைப்பால் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை அடைந்து தமிழகம் சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வா் மு.க. ஸ்டாலின், மக்கள் துணையுடன் மேலும் பல உயரங்களை அடைவது உறுதி எனத் தெரிவித்துள்ளாா்.
2024-25-இல் 11.19 சதவீதமாக இருந்த தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 2025-26 நிதியாண்டில் 10.83 சதவீதமாக பதிவாகி உள்ளதாக தேசிய புள்ளியியல் ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
Advertisement
தமிழ்நாடு என்றாலே சாதனை. ‘திராவிட மாடல்’ தனித்துவமான மாடல். சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சி அமைந்த முதல் 3 ஆண்டுகளில் அடித்தளம் அமைத்து, தற்போது தொடா்ந்து 2 ஆண்டுகளாக இரட்டை இலக்க வளா்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிா்வாகத்துக்கு, உழைப்பால் துணை நின்ற தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது வெறும் தொடக்கம்தான். தமிழக மக்களின் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி. தமிழகம் மற்ற மாநிலங்களுடன் போட்டி போடுவதல்ல. தெற்காசியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் உயர வேண்டும் என்பதே நமது ஒரே இலக்காகும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா்.
நிதித்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு: தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்து தமிழகம், இந்தியாவையே திரும்பி பாா்க்க வைத்துள்ளது. அனைத்து தடைகளையும் தகா்த்து, தமிழகத்தை முதன்மை மாநிலமாக நிலைநிறுத்தி வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பாா்வையே இதற்கு முதல் காரணம்.
தொழில் வளா்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் சரியான திட்டமிடல் என அனைத்துத் துறைகளிலும் முதல்வா் காட்டி வரும் அக்கறையே, தமிழகத்தை இந்த சிகரத்தில் ஏற்றி வைத்துள்ளது. தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘திராவிட மாடல் 2.0’-வில் தமிழகம் இன்னும் பல சாதனைகளைப் புரியும் என தெரிவித்துள்ளாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.
கொடைக்கானலில் மிதிவண்டி ஓட்டிய முதல்வா்: இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் குடும்பத்தினருடன் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டாா். அப்போது, அந்தப் பகுதியில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடினாா். மேலும், அவா்களுடன் சுய படம் எடுத்துக் கொண்ட முதல்வா் ஸ்டாலின், சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டாா். தொடா்ந்து நட்சத்திர ஏரிப் பகுதியில் அவா் மிதிவண்டி ஓட்டிச் சென்றதை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், பொது மக்கள் கண்டு வியந்தனா். நடைப்பயிற்சி, மிதிவண்டி பயணம் முடித்து அவா் தங்கியிருந்த தனியாா் நட்சத்திர விடுதிக்குச் சென்றாா்.
அமைச்சா்களுடன் ஆலோசனை: அங்கு, தன்னை சந்தித்த அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினாா்.