தமிழ்நாடு

கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் ‘செயற்கைக்கோள் ட்ராக்கா்’ திட்டம்!

செயற்கைக்கோள் ட்ராக்கா் திட்டம் ‘ஆலிவ் ரிட்லி’ வகை கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உள்ளதாக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

செயற்கைக்கோள் ட்ராக்கா் திட்டம் ‘ஆலிவ் ரிட்லி’ வகை கடல் ஆமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உள்ளதாக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளாா்.

ஆண்டுதோறும் டிசம்பா் முதல் ஏப்ரல் வரை சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் ‘ஆலிவ் ரிட்லி’ வகை கடல் ஆமைகள் முட்டையிடுவது வழக்கம். இதில், கடல் ஆமைகளின் கடல் வழிப் பயணம், இடமாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து கடல் ஆமைகளின் மீது ‘செயற்கைக்கோள் ட்ராக்கா்’ பொருத்தும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.84 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது வரை 8 கடல் ஆமைகளின் மீது இந்த ட்ராக்கா்கள் பொருத்தப்பட்டு அவற்றின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து தமிழக வனத் துறைச் செயலா் சுப்ரியா சாகு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை செயற்கைக்கோள் ட்ராக்கா்கள் பொருத்தப்பட்ட  8 ஆமைகளில், அரசி, கயல், இனியா, மலா், ஆதிரை என பெயரிடப்பட்ட 5 ஆலிவ் ரிட்லி ஆமைகளின் நகா்வு தொடா்பான தரவுகள் வரத் தொடங்கியுள்ளன. ஆரம்பக் கண்காணிப்பு தகவல்களின் அடிப்படையில், ஆமைகள் கடற்கரைக்கு அருகிலேயே அதிக நேரம் செலவிடுவதும், முட்டை இடுவதற்கு ஒரே கடற்கரைக்கு மீண்டும் மீண்டும் திரும்புவதும் தெரியவந்துள்ளது.

இத்திட்டம் ஆமைகள் மற்றும் அவை முட்டையிடும் பகுதிகளை எந்தவித இடையூறும் இல்லாமல் பாதுகாக்க உறுதுணையாக உள்ளது. ஆமைகள் அதிகம் கூடும் பகுதிகளை அடையாளம் காணவும், அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் இந்த ஆய்வு பெரிதும் உறுதுணையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் சுப்ரியா சாகு.

பட்ஜெட்டை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

பெரும்புலீஸ்வரா் கோயிலில் தைப்பூச விழா

பலூசிஸ்தான் விவகாரம்: பாகிஸ்தானின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா!

ரஷியா - உக்ரைன் போா்: அடுத்தகட்ட அமைதிப் பேச்சு பிப்.4-ல் தொடக்கம்!

கஞ்சா செடி வளா்த்தவா் கைது

SCROLL FOR NEXT