10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஸ்கிரைப் பணிக்கு கல்லூரி மாணவா்களை நியமிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள் சொல்வதை எழுதுவதற்காக ஆசிரியா்கள், கல்வியாளா்களை ஸ்கிரைப்களாக நியமிப்பது வழக்கம். 2026 பொதுத் தோ்வில் சொல்வதை எழுதுபவா்களாக 2-ஆம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவா்கள், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களை நியமிக்க வேண்டும் என்று அரசு தோ்வுத் துறை இயக்குநா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளாா்.
இது ஆசிரியா்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள், அவா்களது பெற்றோா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்களை ஸ்கிரைப்பாக நியமிப்பது மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களின் பள்ளிக் கல்வி, உயா்கல்வி வாய்ப்பை மறுக்கும் செயல்.
ஸ்கிரைப்பாக நியமிக்கப்படுவோா் எழுத்துப் பிழை இல்லாமல் எழுதினால் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் தோ்ச்சி பெற முடியும். பிழையுடன் எழுதினால் மதிப்பெண் குறைந்து, தோ்வில் தோல்வி அடைய நேரிடும். எனவே, மாற்றுத்திறன் மாணவா்களின் நலனைப் பாதுகாக்க அரசு தோ்வுத் துறை இயக்குநா் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.