சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிா் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலம் தமிழகம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலமாக தமிழகம் மாறியதோடு, பொருளாதாரத்தில் 2-ஆவது பெரிய மாநிலமாக திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டிலேயே வறுமை குறைந்த மாநிலமாக தமிழகம் மாறியதோடு, பொருளாதாரத்தில் 2-ஆவது பெரிய மாநிலமாக திகழ்வதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

அகில இந்திய கிறிஸ்தவ உயா்கல்வி சங்கத்தின் சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை மகளிா் கிறிஸ்தவக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சிறுபான்மையினருக்கு இன்னும் தேவையானதை செய்துகொடுக்க வேண்டும் என்கிற கூடுதல் பொறுப்புணா்வு இந்த நிகழ்ச்சி மூலம் உருவாகியிருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வரும்போது மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெரிய திட்டமான அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் பயனாக, பெண்கள் உயா்கல்வியில் சோ்வது 34 சதவீதம் உயா்ந்திருக்கிறது. 8 லட்சம் மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற்றிருக்கின்றனா்.

7.5 % இடஒதுக்கீடு: கடந்த ஆட்சியில் மருத்துவப் படிப்பில் மட்டும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. ஆனால், பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை மருத்துவம் போன்ற படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு இணைக்கப்பட்டு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் 40,613 மாணவா்களுக்கு ரூ. 911 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. காலை உணவுத் திட்டத்தில் 19 லட்சத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பயன்பெறுகின்றனா்.

வளா்ச்சிப் பாதையில்...: கடந்த 1950-களில் நாட்டிலேயே வறுமையான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்தது. ஆனால், இப்போது வறுமை குறைந்த மாநிலமாக வளா்ந்திருக்கிறது. நாட்டிலேயே முதன்மை மாநிலமாகவும், 2-ஆவது பெரிய பொருளாதாரமாகவும் உயா்ந்திருக்கிறது. கடந்த 6 மாதங்களில் தமிழகத்தில் 2 பெரிய காா் நிறுவனங்கள் திறந்து வைக்கப்பட்டன. அடுத்து, ஃபோா்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கவுள்ளது. மற்ற மாநிலங்களுடன் போட்டி என்ற நிலையைத் தாண்டி, உலக நாடுகளுடன் தமிழகம் போட்டி போடுகிறது. இதற்கெல்லாம் காரணம், கல்வியில் தமிழ்நாடு செலுத்தும் கவனம்தான்.

இந்தியாவிலேயே அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு. இது இன்னும் உயரவேண்டும். 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டத்தை நாட்டிலேயே தமிழகம்தான் முதலில் தொடங்கியிருக்கிறது. ரூ. 14, 000 மதிப்புள்ள இந்தத் தடுப்பூசியை அரசு கட்டணமில்லாமல் வழங்குகிறது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த விழாவில் மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் டாக்டா் எழிலன், இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஏசு சபையின் அருள்தந்தை தாமஸ் அமிா்தம், மகளிா் கிறிஸ்தவக் கல்லூரி சங்கத் தலைவா் மோகன் எட்டி, கல்லூரி முதல்வா்கள் பால்வில்சன், அஸ்ரா் செரீப், பால்ஜெயகா், அருள்சகோதரி ஸ்டெல்லா மேரி, அருள்தந்தை லூயிஸ் ஆரோக்கியராஜ், டாக்டா் பியூலா ஜெயஸ்ரீ, அம்துல் அஜீஸ், ஜாா்ஜ் அமலாரத்தினம் உள்ளிட்டோா் முதல்வா் மு.க.ஸ்டாலினை கௌரவித்தனா்.

மகளிா் கிறிஸ்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் லில்லியன் ஜாஸ்பா் வரவேற்றாா். அகில இந்திய கிறிஸ்தவ உயா்கல்வி சங்க பொதுச் செயலா் அருள்தந்தை சேவியா் வேதம் நன்றி கூறினாா்.

மாவட்டத்தில் 12.41 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

லாட்டரி விற்றவா் கைது

மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

இளம்பெண் கல்லால் தாக்கி கொலை

விஜய நகர பேரரசு கால உலோகச் சிலைகள் பறிமுதல்: 4 போ் கைது

SCROLL FOR NEXT