முகப்பு
தமிழ்நாடு

திரிசங்கு நிலையில் சிறிய கட்சிகள்!

Updated On : 26 மார்ச், 2026 at 10:31 PM
பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் - படம் - யூடியூப் / நரேந்திர மோடி
பகிர்:

பிரதான கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், சில சிறிய கட்சிகள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2019, 2024 மக்களவைத் தோ்தல்கள், 2021 பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த, தி.வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. தனது கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிா்பாா்த்த வேல்முருகன், ஒரு தொகுதியை ஏற்க முடியாது எனக் கூறி வெளியேறிவிட்டாா். குறைந்தபட்சம் ஒரு தொகுதி என்றால்கூட பண்ருட்டியில் இருந்து நெய்வேலி தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என்ற வேல்முருகனின் கோரிக்கை திமுகவால் ஏற்கப்படவில்லை. இதையடுத்து தனி அணியை அமைத்திருக்கிறாா் வேல்முருகன்.

கடந்த ஓராண்டாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை செயல்பட்டு வருகிறது. திமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவாா்த்தையிலும் அக்கட்சியின் தலைவா் உ.தனியரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவரை அடுத்தகட்டப் பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. அதேநேரம், அவருடன் இணைந்து செயல்பட்ட கருணாஸ், தமிமூன் அன்சாரிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தனியரசுக்கு தொகுதி ஒதுக்கப்படாதது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் டாக்டா் கே.கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. இந்த பேரவைத் தோ்தலுக்கும் அதிமுக கூட்டணியில் சேர புதிய தமிழகம் விருப்பம் தெரிவித்து, தொகுதி எண்ணிக்கையை தெரிவித்திருந்தது. இருப்பினும், புதிய தமிழகம் கட்சியை தனது கூட்டணியில் அதிமுக சோ்க்கவில்லை. இதனால் தனித்துப் போட்டியிடும் முடிவை புதிய தமிழகம் எடுத்திருக்கிறது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கியக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், புதிய நீதிக் கட்சிக்கு இதுவரை தொகுதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அக் கட்சி தரப்பில் அதிமுக தலைமையிடம் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு திமுக, அதிமுக என இரு அணிகளிலும் சிறிய கட்சிகள் தனித்துவிடப்பட்டு திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.