அதிமுக தவறு செய்கிறது: டாக்டர் கே.கிருஷ்ணசாமி சிறப்பு நேர்காணல்
தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களை மையப்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கக் கூடிய முக்கிய அரசியல் கட்சியான புதிய தமிழகம், வெவ்வேறு காலகட்டங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது
தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களை மையப்படுத்தி கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கக் கூடிய முக்கிய அரசியல் கட்சியான புதிய தமிழகம், வெவ்வேறு காலகட்டங்களில் திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த அக்கட்சி, இந்த முறையும் அதே கூட்டணியில் இடம்பெறும் என்று கருதப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தனித்துக் களம் காணத் தயாராகி வருகிறது. அதற்கான காரணங்களையும், தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும் விளக்குகிறார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி.
அதிமுக கூட்டணியில் உங்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் உங்களது முடிவுதான் என்ன?
1996 பேரவைத் தேர்தலில் ஓட்டப்பிடாரத்தில் தனித்துப் போட்டியிட்டு வென்றதில் எங்களது தேர்தல் பயணம் தொடங்கியது. 1998 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று அரசியல் களத்தில் புறக்கணிக்க முடியாத சக்தியாக உருவானோம். தென் தமிழ்நாட்டில் இன்றும் வலுவாக இருக்கிறோம். கடந்த பேரவைத் தேர்தலில் 60 இடங்களில் தனித்துப் போட்டியிட்டோம். இந்தத் தேர்தலிலும் அதேபோல் போட்டியிடுகிறோம்.
அதிமுக கூட்டணியில் நீடிப்பதில் என்ன சிக்கல்?
இந்த முறை தொடக்கத்தில் இருந்தே அதிமுகவுடன்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையில் எங்களுக்கு ஐந்து தொகுதிகளோ, நான்கு தொகுதிகளோ கொடுங்கள்; ஓட்டப்பிடாரம் தொகுதி என்றால் டாக்டர் கிருஷ்ணசாமி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், எங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் திருவிடைமருதூர் தொகுதியைக் கொடுப்பதாகச் சொன்னார்கள். மேலும் எங்கள் கட்சியின் ஒட்டுமொத்த பலத்தையும் வெறும் 2 என்ற எண்ணிக்கையில்தான் பார்க்கின்றனர். எனவே, அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியவில்லை.
புதிய தமிழகம் பெரிய அளவில் எதிர்பார்த்ததாக அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறதே?
அப்படி இல்லை. நாங்கள் கேட்ட தொகுதியைக் கொடுக்காமல் தொடர்பு இல்லாத தொகுதிகளைக் கொடுத்தனர். கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களுடன் அரசியல் செய்துள்ளேன். இப்போது இருப்பவர்கள் சிறு கட்சிகளை வெறும் ஒன்றிரண்டு இடங்களாகத்தான் பார்க்கின்றனர். புதிய தமிழகத்தைத் தாண்டி தேவேந்திர குல வேளாளரிடம் நீங்கள் எளிதில் சென்றுவிட முடியாது என்பதையும், கடந்த தேர்தலில் இதேபோலத்தான் எங்களைத் தவிர்த்ததால் 30 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை இழந்தனர் என்பதையும் அதிமுகவிடம் எடுத்துக் கூறினோம்.
பாஜகவுடன் நெருக்கமாகத்தானே இருந்தீர்கள், அவர்களும் கைவிட்டுவிட்டனரா?
பாஜகவுடன் இணக்கமான உறவில் இருந்தோம். பல பிரச்னைகளில் அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறோம். ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் ஒரே சமுதாயத்தின் பிரதிநிதியாக பிரதிபலிக்கும் மற்றொருவரை அழைத்து வந்து எங்களுக்கு எதிராக களத்தில் நிறுத்தினர். புதிய தமிழகத்துக்கும் ஜான் பாண்டியனுக்கும் கொள்கை ரீதியில் உடன்பாடு இல்லை. பாஜக மீதான எங்களது கோபத்துக்கு இதுதான் காரணம்.
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஆமாம், நாங்களும் எங்களது மதுரை மாநாட்டில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினோம். கூட்டணி ஆட்சி என்பதை தவெகவின் விஜய் சரியான நேரத்தில் கூறியிருந்தார். ஆனால், அதிகாரத்தில் பங்கு என்ற வார்த்தையையே திமுக, அதிமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. அக்கட்சிகள் பொருளீட்டும் நிறுவனங்களாக மாறிவிட்டதே ஆட்சியில் பங்கு வழங்காமல் தவிர்ப்பதற்கான காரணம் என்று நினைக்கிறேன். திமுக சமூக நீதி பேசுகிறது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்பதுதான் உண்மையான சமூக நீதி என்பது அக்கட்சிக்குத் தெரியவில்லை.
இந்தத் தேர்தலில் கூட்டணி வியூகத்தில் யார் வெற்றி பெற்றதாகக் கருதுகிறீர்கள்?
அதிமுக கூட்டணியைப் பொருத்தவரை திமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வியூகமே இல்லை. புதிய தமிழகத்தால் மட்டுமே 60 முதல் 70 தொகுதிகள் வரை அதிமுக - பாஜக கூட்டணி இழப்பைச் சந்திக்கும். ஆனால், இந்த விஷயத்தில் திமுக சாதுரியமாகச் செயல்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அதிமுக தவறு செய்துவிட்டதாகவே கருதுகிறேன்.
கட்சிகளின் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகள் குறித்து...
இலவசங்களில் புதிய தமிழகத்துக்கு உடன்பாடு இல்லை. அது எந்தப் பிரச்னைக்கும் நிரந்தரத் தீர்வு இல்லை. எங்களது கூட்டணிக் கட்சியாகவே இருந்தாலும் இலவசங்களை நாங்கள் ஏற்க மாட்டோம். பல இடங்களில் தலித்துகளுக்கு 3 சென்ட் இடத்தைக்கூட இன்னும் சாத்தியப்படுத்த முடியாத நிலையில், ஃபிரிட்ஜ் மட்டுமல்ல கார், விமானமே கொடுத்தும்கூட என்ன லாபம்? இலவசம் கொடுத்து மீண்டும் எங்கள் மக்களை கையேந்திகளாக வைத்திருக்கவே அவர்கள் விரும்புவதை இந்த அறிவிப்புகள் காட்டுகின்றன.
வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் உள்ளதே, மீண்டும் கூட்டணிக்கு அணுகுவார்கள் என்று நினைக்கிறீர்களா?
நாங்கள் நிறைய முயற்சித்துவிட்டோம். ஆனால் அவர்கள் இறங்கி வருவார்களா என்று தெரியாது. ஒற்றை சீட், இரட்டை சீட் கட்சி என்ற அவச்சொல் எங்களுக்கு வந்துவிடக் கூடாது. எங்கள் கட்சி எனக்காகவோ என் குடும்பத்துக்காகவோ இல்லை, எனது சமுதாயத்துக்காக உள்ளது. என்னுடைய மக்களின் மீதான மதிப்பும், மரியாதையும், கெüரவமும்தான் முக்கியம். அதிகாரத்தை இன்று இல்லாவிட்டால் 10, 20 ஆண்டுகள் கழித்துக்கூட பெறுவோம். அதற்காக யாரிடமும் சரணடைய மாட்டோம்.
நேர்காணல்: க.தங்கராஜா