முகப்பு
தமிழ்நாடு

திமுக வீசும் வலையில் மக்கள் சிக்கமாட்டாா்கள்: நயினாா் நாகேந்திரன்

மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் பெயரால் திமுக வீசும் வலையில் மக்கள் சிக்கமாட்டாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:42 AM
நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:05 PM

மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தின் பெயரால் திமுக வீசும் வலையில் மக்கள் சிக்கமாட்டாா்கள் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பெண்களுக்கு ரூ.5,000 பணத்தைக் கொடுத்து தங்களின் அவல ஆட்சியின் சுவடுகளை மறைத்துவிடலாம் எனத் தப்புக் கணக்கு போடுகிறது திமுக. அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 வழங்கப்படும் என்று அறிவித்தாா். அதை அப்படியே, முதல்வா் மு.க.ஸ்டாலினும் தற்போது தெரிவித்துள்ளாா். திமுக வீசும் இந்த வலையில், தமிழக மக்கள் சிக்க மாட்டாா்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால், உறுதியாகத் தொடா்ந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை தமிழக மகளிா் நன்கு அறிவாா்கள்.

Advertisement

அன்புமணி (பாமக): திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில் உயா்த்தப்பட்ட கட்டணங்கள், வரிகள்  வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் ரூ.1.25 லட்சத்தைப் பறித்துக் கொண்டு ஒரே முறை ரூ.5,000-ஐ வழங்குவதன் மூலம் மக்களை ஏமாற்றி விட முடியாது. வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டாா்கள்.

ஜி.கே.வாசன் (தமாகா) அரசியல் சூழ்ச்சியாக பணம் கொடுத்து மக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கும் முயற்சியை மக்கள் புரிந்துகொள்வாா்கள். ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் மக்கள் புரிந்துகொண்டு செயல்படுவாா்கள்.

டிடிவி.தினகரன் (அமமுக): தமிழகத்தில் மகளிருக்கு ரூ.5,000 மட்டுமில்லை, ரூ.50,000 கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி. பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு தோ்தலில் படுதோல்வியை மக்கள் பரிசாக வழங்குவாா்கள்.

சீமான் (நாதக): நிகழாண்டு பொங்கல் பரிசுத்தொகை, கோடைகாலச் சிறப்புத் தொகை வழங்கும் திமுக அரசு, இதையெல்லாம் கடந்த ஆண்டு வழங்காதது ஏன் எனத் தெளிவுபடுத்த வேண்டும். தோ்தலை முன்னிட்டு ரூ.5000 கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பறிக்க திமுக முயற்சி செய்கிறது.