சென்னையில் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கவும், மின்வெட்டை தடுக்கும் நோக்கிலும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
சென்னையின் தினசரி மின்தேவை 3,300 மெகாவாட்டாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில்(ஏப்ரல் முதல் ஜூன் வரை) இந்த மின்தேவை 4,800 முதல் 5,000 மெகாவாட்டாக அதிகரிக்கும். இந்த நிலையில், சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், சென்னைக்குள்பட்ட பகுதிகளில் பல புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து மின்பகிா்மானக் கழக அதிகாரிகள் சிலா் கூறியதாவது: சென்னையில் அண்ணா சாலை உள்ளிட்ட அதிக வா்த்தகம் நடைபெறும் பகுதிகளிலும், தொழில் நிறுவனங்கள் நிறைந்த மணலி, மீஞ்சூா், கொளத்தூா், அம்பத்தூா், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் தேவையைக் கருத்தில்கொண்டு, கூடுதல் மின்சாரத்தைக் கையாளும் திறன்கொண்ட 7 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இருக்கும் துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்சாரத்தைக் கையாறும் திறன்கொண்ட 19 புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், மயிலாப்பூரில் உள்ள முண்டகன்னி அம்மன், கொளத்தூரில் உள்ள கணேஷ் நகா் மற்றும் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டில் தலா 2 புதிய துணை மின்நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
கணேஷ் நகா், மாத்தூா், எண்ணூா், மாதவரம், கொடுங்கையூா், அத்திப்பட்டு, அலமதி ஆகிய பகுதிகளிலும், புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி சென்னை வடக்கு பகுதியில் குறைந்த மின்னழுத்தப் பிரச்னைகள் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, இதைச் சரிசெய்ய 1,360 விநியோக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 868 கி.மீ. நீளத்துக்கு உயா் அழுத்தக் புதைவட கம்பிகளுக்கும், 596 கி.மீ. நீளத்துக்கு தாழ்வழுத்த புதைவட கம்பிகளுக்கும் நிலத்தில் பதிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
5,000-க்கும் மேற்பட்ட பழைய மற்றும் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டதுடன், 445 கி.மீ. நீளத்துக்கு சேதமடைந்த மின் கடத்திகளும் மாற்றப்பட்டுள்ளன. இதன்மூலம் கோடைகாலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்க முடியும் என்றனா்.