முகப்பு
தமிழ்நாடு

திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை: தொல். திருமாவளவன்

அதிமுக தலைமையிலான கூட்டணி, ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை: தொல். திருமாவளவன்

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:54 PM
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:30 PM

சிதம்பரம் : அதிமுக தலைமையிலான கூட்டணி பல்வேறாக பிரிந்து இருக்கிறது. அவற்றை இப்போது ஒன்று சேர்ப்பதற்கே அவர்கள் போராடுகிற நிலை உள்ளது. இன்னும் அதிமுக தலைமையிலான கூட்டணி, ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பி.யுமான தொல். திருமாவளவன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) சிதம்பரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தது:

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:31 PM

“சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் ஜனநாயக பூர்வமானது. உயர்கல்வி துறையும், தமிழ்நாடு அரசும் அதன் நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

Advertisement

ஏற்கனவே அவர்களை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் அவை நிறைவேறவில்லை. அதனால் அவர்கள் மீண்டும் போராடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

டாஸ்மாக் பணியாளர்கள் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கையாக இருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மாற்றுப்பணி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும்.

கௌரவ விரிவுரையாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள், என்.எம்.ஆர். பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வர் இதில் கவனம் செலுத்தி அவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

முதல்வர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 5,000 ஆனது. தற்போது 1 கோடியே 31 லட்சம் பேர் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார். தேர்தல் நேரத்தில் இதை வழங்கக்கூடாது என சங்பரிவார் கும்பல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ள நேரத்தில், அவர்களது சதியை முறியடிக்கும் வகையில் முதல்வர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை ராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மகளிர் மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது.”

திமுக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு :

“திமுக கூட்டணிக்கு தமிழகத்தின் மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவை நல்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எண்ணற்ற புதிய திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றால் ஆதரவு பெருகுகிறது. கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சுகாதாரம் போன்றவற்றில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதற்கு முதல்வரின் பங்கு பெரிதாக உள்ளது. அதனால் அறிவார்ந்தவர்கள் அவரைப் பாராட்டுகிறார்கள். இந்தக் கூட்டணி 2017முதல் இயங்கி வருகிறது.”

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிளவு :

“அதிமுக தலைமையிலான கூட்டணி பல்வேறாக பிரிந்து இருக்கிறது. அவற்றை இப்போது ஒன்று சேர்ப்பதற்கே அவர்கள் போராடுகின்ற நிலை உள்ளது. இன்னும் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு கூட்டணியாகவே வடிவம் பெறவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. அதனால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதற்கு தகுதியான ஒரு கூட்டணி இன்னும் அமையவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

எனவே இந்த தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கூட்டணிக்கு பேராதரவு நல்குவார்கள். எதிர்க்கட்சிகளின் பார்வையில் தேர்தலுக்காக, பயனாளிகளின் பார்வையில் அவர்களின் ஆண்களுக்காக, எங்களின் பார்வையில் பெண்களின் வளர்ச்சிக்காக, எனவே எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் என்ன சொன்னாலும் அந்த விமர்சனம் எடுபடாது.

மாற்றுத்திறனாளிகளுக்குரிய தொகை வழங்கப்படவில்லை என்ற குறை உள்ளது. இதை கவனத்திற்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா கட்சி துவங்குவதென்பது அவருடைய விருப்பம். அது அவரது அரசியல் தேவையை பொருத்தது.

வருகிற 22ஆம் தேதிமுதல் கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என திமுக தலைவர் அறிவித்திருக்கிறார். ஒவ்வொரு தோழமைக் கட்சிகளாக அவர்கள் அழைப்பு விடுத்து பேசுகிறார்கள்.”

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 1:31 PM

மக்களவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் :

“நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதைத் திரும்பப்பெற வேண்டும் என்று எல்லா கட்சிகளும் வலியுறுத்தி இருக்கின்றன. ஆனாலும் மக்களவைத் தலைவர் அதற்கு உடன்படவில்லை.

எதிர்க்கட்சிகளைப் பேசவிடாமல் தடுப்பது, எதிர்க்கட்சித் தலைவரைப் பேசவிடாமல் தடுப்பது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதனால் மக்களவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு 100க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையொப்பமிட்டு அவையின் பொதுச்செயலரிடம் வழங்கி இருக்கிறார்கள்.

மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது, இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.”

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஊசலாட்டம் இல்லை :

“காங்கிரசின் நிலைப்பாடு குறித்து நான் கருத்து சொல்ல எதுவும் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அப்படி எந்த ஊசலாட்டமும் இல்லை. நாங்கள், வலதுசாரி அரசியல் இந்த மண்ணில் வலுப்பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இடைவெளிகள் இருந்தாலும், முரண்பாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் அவற்றை சரி செய்து கொள்ள முடியும் என்று விசிக நம்புகிறது.

இதற்காக இந்த கூட்டணியின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த முடிவையும் விசிக எடுக்காது. விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும்.

பாஜகவும், பாமகவும் சாதி, மத அடிப்படையில் செயல்படுவதால் அவர்களோடு தேர்தல் கூட்டணி இல்லை; தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள இயலாது என்று ஏற்கெனவே முடிவெடுத்த ஒன்றுதான். தற்போது, திமுக தலைமையில் என்னென்ன கட்சிகள் மேலும் இணைய வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கக்கூடிய முழு அதிகாரம் முதல்வருக்குத்தான் உள்ளது. அவருக்கு நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. கொடுக்கவும் மாட்டோம்” என்றார் .

summary

The AIADMK-led alliance has not taken shape as an alliance: Tho. Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.