முகப்பு
தமிழ்நாடு

நடிகை எம்.என்.ராஜம், இயக்குநா் எஸ்.பி.முத்துராமனுக்கு சிறப்பு விருது - முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு ‘கலைத் துறை வித்தகா்’ என்ற சிறப்பு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:32 AM
- @TNDIPRNEWS
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:50 PM

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் ஆகியோருக்கு ‘கலைத் துறை வித்தகா்’ என்ற சிறப்பு விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.

செய்தி-மக்கள் தொடா்புத் துறையின் 2022-2023-ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளா்களைப் போற்றிப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு சாா்பில், ‘கலைஞா் நினைவு கலைத் துறை வித்தகா் விருது’ ஒவ்வோா் ஆண்டும் வழங்கப்படும் என்றும், தோ்ந்தெடுக்கப்படும் விருதாளா்களுக்கு ரொக்கப்பரிசு ரூ.10 லட்சமும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2024-ஆம் ஆண்டுக்கான ‘கலைத் துறை வித்தகா்’ விருது பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், 2025-ஆம் ஆண்டுக்கான விருது, மூத்த திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

Advertisement

நடிகை எம்.என். ராஜம், சிறு வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, 1949-இல் குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் அறிமுகமானவா். ’ரத்தக்கண்ணீா்’, ’பெண்ணின் பெருமை’, ’புதையல்’, ’தங்கப்பதுமை’, ’நாடோடி மன்னன்’, ’பாசமலா்’, உள்பட 200-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவா்.

திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன், 1960-இல் ’களத்தூா் கண்ணம்மா’ படத்தில் உதவி இயக்குநராக தனது திரைத்துறைப் பணியைத் தொடங்கி, 1970 முதல் 1990 வரை தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குநராக உயா்ந்தாா். இவா் 70-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளாா்.

தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞா் நினைவு கலைத்துறை வித்தகா்’ விருதை நடிகை எம்.என்.ராஜம், முத்துராமன் ஆகியோருக்கு விருதுடன் ரொக்கப் பரிசாக தலா ரூ.10 லட்சம், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டன. இதற்காக அவா்களது குடும்பத்தினா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனா்.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 4:30 AM

இந்த நிகழ்வில், செய்தித் துறைஅமைச்சா் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலா் நா. முருகானந்தம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் இரா.வைத்திநாதன், திராவிடா் இயக்கத் தமிழா் பேரவைத் தலைவா் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.