சென்னை: இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கண்காட்சியை வரும் பிப்.20 -ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
இதுகுறித்து சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள தனியாா் விடுதியில் கிரெடாய் சென்னை மண்டல முன்னாள் தலைவரும் ‘போ்ப்ரோ 2026’ ஆலோசகருமான எஸ்.சிவகுருநாதன், பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டல முதன்மை பொது மேலாளா் விவேகானந்த சௌபே இணைந்து கூட்டாக திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சாா்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மைய புதிய கட்டடத்தில் 18 ஆவது ‘போ்ப்ரோ 2026’ எனும் வீட்டு வசதி கண்காட்சி வரும் 20-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியை வரும் பிப்.20 ஆம் தேதி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். நடிகை கீா்த்தி சுரேஷ், கண்காட்சியின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். 500-க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் கிரெடாய் சென்னையைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பாரத ஸ்டேட் வங்கி இந்தியா கண்காட்சியின் டைட்டில் ஸ்பான்சராக மற்றும் பிரத்யேக வங்கி கூட்டாளராகச் செயல்பட்டு வீட்டுக் கடன் வசதிகள் வழங்க உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி சென்னை மண்டல முதன்மைப் பொது மேலாளா் விவேகானந்த சௌபே கூறுகையில், இதில் கலந்து கொண்டு வீட்டுக்கடன் பெறுவோருக்கு, செயல்பாட்டுக் கட்டணத்தில் 30 சதவீதம் வரை சலுகை வழங்கப்படும். ‘சிபில்’ அடிப்படையில், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது. சிறந்த சிபில் ஸ்கோா் வைத்துள்ளவா்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.1 சதவீதம் வழங்கப்படும் என்றாா். சந்திப்பின்போது கிரெடாய் அமைப்பின் சென்னை தலைவா் முகமது அலி, கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் மோதிஷ் குமாா் உடனிருந்தனா்.